;
Athirady Tamil News

வேலணை பிரதேச சபை எல்லைக்குள் குழாய்க்கிணறு அடிக்க அனுமதி அவசியம் ; மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை

0

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது குழாய்கிணறு அடிக்கும் இயந்திரங்களின் உரிமையாளர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது.

இது குறித்து பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதவது

வேலணை பிரதேச சபைக்குட்பட்ட இடங்களில் அண்மைக்காலமாக எந்தவிதமான அனுமதியும் பெறப்படாது அதிகளவான குழாய்க்கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளை எந்தவிதமான கட்டுப்பாடுகள் மற்றும் போதிய வழிகாட்டுதல்களுமின்றி தான்தோன்றித்தனமாக அமைப்பதானது எமது பிரதேசத்தில் காணப்படுகன்ற மிக சொற்பமான நன்னீர்க் கிணறுகளையும் வெகுவிரைவில் பாதிப்படையச் செய்யும் ஒரு செயற்பாடாகவே இருக்கின்றது.

இதனால் குறித்த செயற்பாட்டை விரைந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

அதடிப்படையில் குழாய்க்கிணறுகளை அமைக்க உத்தேசித்துள்ளவர்கள் பிரதேச சபையின் ஊடாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு விண்ணப்பித்து அவர்களது சிபார்சிற்கு அமைவாக பிரதேச சபையின் அனுமதியினைப் பெற்றுக்கொள்வது கட்டாயமானதாகும்.

அத்துடன் உடனடியாக செயற்படும் வண்ணம் இந்த நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படும் என்பதோடு அனுமதியின்றி குழாய்க்கிணறு அமைப்பவர்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதே நேரம் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் தங்களது சேவை வழங்கல் தொடர்பாக பிரதேச சபையில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிமப்பத்திரத்தினை பெற்றுக்கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது .

அத்துடன் குழாய்க்கிணறு அமைக்கும் சேவை வழங்குநர்கள் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே கிணறு அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதுடன் அனுமதிப்பத்திரம் இல்லாதோருக்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தல் தண்டனைக்குரிய குற்றச்செயலாகும் அத்துடன் குழாய்க்கிணறு அமைப்பதற்கான சேவை வழங்கல் உரிமப்பத்திரமின்றி எமது பிரதேச சபைக்குள் பிரவேசிக்கும் குழாய்க்கிணறு அமைக்கும் இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் பிரதேச சபையால் பொலிசார் ஊடாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அருகிவரும் தீவகப் பிரதேசத்தின் நன்னீர் வளத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு வேலணைப் பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற இந்த நடைமுறைகளைப் பின்பற்றி எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வேலணை பிரதேச சபை கோருகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.