;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் இரணுவத்தினர் இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

0

முல்லைத்தீவு முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதுடன் தாக்குதலில் 32வயதுடைய குடும்பஸ்தரொருவரே காணாமல் போயுள்ளார். இந்நிலையில் காணாமல் போன இளைஞன் இன்று (09) காலை முத்தையன்கட்டு குளத்தில்சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இராணுவ முகாமிற்கு வாருங்கள்
முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என அப் பகுதி இளைஞர் ஒருவருக்கு தொலைபேசியில் நேற்றுமுன்தினம் (07) இரவு 7.30 மணியளவில் அழைப்பு விடுக்கப்பட்டது.

குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவ் இராணுவ முகாமிலுள்ள கட்டிடங்களை அகற்றும் நடவடிக்கையை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தகரங்கள் தருவதாக கூறி அப்பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு இராணுதினர் தெரிவித்த நிலையில், நேற்று இரவு ஐவர் சென்றுள்ளனர். இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களுக்கு தடிகள், கம்பிகளால் இராணுவத்தினர் துரத்தி சென்று முகாமிற்கு பின்பகுதியாக உள்ள குளம் வரை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலால் என்ன செய்வதென்று தெரியாது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக ஓடி தப்பி வந்ததாகவும் 20 ற்கு மேற்பட்ட இராணுவத்தினர் தம்மை தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்றையதினம் இராணுவ முகாமிற்கு வந்த இராணுவ வாகனம் வீதியில் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டு நியாயம் கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

அச்சத்தில் மக்கள்
மாயமாகிய இளைஞர் தப்பி ஒடும்போது இராணுவ முகாமிற்கு பின்பகுதியாக உள்ள முத்தையன்கட்டு குளத்தின் பின்பகுதியில் வீழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி கிராம மக்கள் நீரில் இறங்கி வலை விட்டு தேடுதல் நடவடிக்கையையும் மேற்கொண்ட நிலையில் இளைஞனின் சடலம் இன்று(9) குளத்தில் மீட்கப்பட்டுள்ளது.

அதேவேளை காணாமல் போன இளைஞனின் சகோதரரால் குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சகோதரர் தெரிவித்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இராணுவத்தினரின் இந்த அடாவடி செயலால் பிரதேச மக்கள் அதிர்ச்சியடைத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.