விஜய் பொதுக்கூட்டத்தில் அதிரடி காட்டிய ஐ.பி.எஸ். அதிகாரி.. யார் இந்த இஷா சிங்?
புதுச்சேரி,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. தீவிரமாக தயாராகி வருகிறது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் சந்திப்பை விஜய் தொடங்கவில்லை. கடந்த மாதம் காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாக உள்அரங்கத்தில் விஜய் மக்கள் சந்திப்பில் பங்கேற்று பேசினார். கரூர் சம்பவத்தை அடுத்து 72 நாட்களுக்குப் பின் பொதுவெளியில் புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்பதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள போலீசார் அனுமதி அளித்தனர். அவர்களுக்கு கியூ.ஆர். கோடுடன் கூடிய பாஸ் வழங்கப்பட்டு இருந்தது. தொண்டர்கள் நேற்று காலை 6 மணி முதல் அங்கு குவியத் தொடங்கினர். அவர்கள் மைதான நுழைவாயிலில் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
நேரம் செல்ல செல்ல அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டது. திடீரென அவர்கள் போலீசாரின் தடுப்பை தள்ளி விட்டு மைதானத்துக்குள் நுழைய முயன்றனர். இதை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை ஒழுங்குபடுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புஸ்சி ஆனந்திடம் சீறிய பெண் போலீஸ் உயர் அதிகாரி
விஜய் பொதுக்கூட்ட மைதான நுழைவாயிலில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷாசிங் நேற்று காலை பணியில் ஈடுபட்டார். அப்போது காலை 9 மணியளவில் பாஸ் இல்லாதவர்களுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் மற்றும் புஸ்சி ஆனந்த் மைதானத்தில் ஏராளமான இடம் உள்ளது. பாஸ் இல்லாத தொண்டர்களையும் உள்ளே செல்ல அனுமதியுங்கள் என்று அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் ஆவேசம் அடைந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷாசிங், ‘காவல்துறை என்ன செய்ய வேண்டும்? என நீங்கள் உத்தரவிடாதீர்கள். இங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் நாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பதில் சொல்ல வேண்டும். கரூரில் நடந்த சம்பவத்தில் 41 பேர் பலியான சம்பவம் நினைவில் இல்லையா? அதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்கு தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்களுக்கு அளிக்கப்பட்ட நிபந்தனைகளை சரியாக பின்பற்றுங்கள்’ என்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இறுதியில் காலை 10.10 மணிக்கு மேல் பாஸ் இல்லாத தொண்டர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
விஜய் பொதுக்கூட்டத்தில் அதிரடி காட்டி அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் இஷா சிங். யார் இவர்..?
இஷா சிங் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். மராட்டியத்தை சேர்ந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுவை காவல்துறையில் சேர்ந்து கிழக்குபகுதி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு துறை சீனியர் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றார். சுகாதாரத்துறையில் போலி மருந்து மோசடி வழக்கில் துணிச்சலுடன் செயல்பட்டு சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர்கள் 2 பேர் உள்பட 6 பேரை கடந்த மாதம் அதிரடியாக கைது செய்தார்.
இஷா சிங்கின் தாத்தா, தந்தை ஒய்.பி. சிங் இவர்களும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆவர். தந்தை ஒய்.பி. சிங் கடந்த 2004-ம் ஆண்டு காவல்துறையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். அவரது தந்தை ஓய்வு பெற்ற உடனே ஐ.பி.எஸ். ஆக வேண்டும் என்று இஷா சிங் விருப்பம் தெரிவித்தார். ‘நேசனல் ஸ்கூல் ஆப் லா’ கல்லூரியில் சட்டமும் படித்த இஷா சிங் மும்பை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.
சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு குரல் கொடுப்பவராக திகழ்ந்தார். விஷவாயு தாக்கி உயிரிழந்த மனித கழிவுகளை அப்புறப்படுத்தும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்காக மும்பை ஐகோர்ட்டில் வாதாடி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் பெற்றுக் கொடுத்தார். அதன்பின் இந்திய குடிமை பணிக்கான தேர்வு எழுதி தற்போது ஐ.பி.எஸ்.அதிகாரியாக உள்ளார். தற்போது அவர் ஐ.ஏ.எஸ். மற்றும் நீதிபதிக்கான தேர்வுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.