இந்தோனேசியா அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து! 22 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!
இந்தோனேசியாவில், அலுவலகக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில், அந்தக் கட்டடத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் ஜகார்த்தாவில், கெமாயோரன் பகுதியில் அமைந்துள்ள 7 அடுக்குமாடி அலுவலகக் கட்டடத்தில், இன்று (டிச. 9) நண்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீயானது வேகமாக மற்ற தளங்களுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், 29 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி ஒரு கர்ப்பிணிப் பெண் உள்பட 15 பெண்களும், 7 ஆண்களும் என மொத்தம் 22 பேர் பலியானதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு கிழக்கு ஜகார்த்தாவில் உள்ள மருத்துவமனையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.
இத்துடன், விபத்து ஏற்பட்ட கட்டடம் டிரோன் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகம் எனவும், சோதனைப் பகுதியில் இருந்த பேட்டரிகளின் மூலம் தீ உருவாகியிருக்கக் கூடும் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.