ஆப்கனில் ஒரேநாளில் இருமுறை நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தான் நாட்டில், 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில், நிலப்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று (டிச. 9) மதியம் 1.17 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, தேசிய நிலஅதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் மதியம் 2.36 மணியளவில் நிலப்பரப்பில் இருந்து சுமார் 70 கி.மீ. ஆழத்தில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த நிலநடுக்கங்களின் அதிர்வுகள் அங்குள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் உணரப்பட்டதாக, உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்திய மற்றும் யுரேஷிய டெக்டோனிக் தகடுகளின் பல்வேறு பிளவுக்கோடுகளின் மீது ஆப்கானிஸ்தானின் நிலப்பரப்பு அமைந்துள்ளது. இதனால், அந்நாடு நிலநடுக்கங்களால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த நவ.4 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 27 பேர் பலியாகினர். மேலும், 956-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இத்துடன், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.