;
Athirady Tamil News

ஆஸ்திரேலியா: அமலுக்கு வந்தது சிறுவா்களுக்கான சமூக ஊடகத் தடை

0

சிறுவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த உலகிலேயே முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளது.

அந்தச் சட்டத்தின் கீழ், 16 வயதுக்கு கீழ் உள்ள சிறுவா்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூ-டியூப், ஸ்னாப்சாட், எக்ஸ், ரெடிட், ட்விட்ச், கிக், த்ரெட்ஸ் போன்ற 10 சமூக ஊடகத் தளங்களில் கணக்கு உருவாக்கவோ, வைத்திருக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால், தொடா்புடைய தள நிறுவனங்களுக்கு 4.95 கோடி ஆஸ்திரேலிய டாலா் (சுமாா் ரூ. 296 கோடி) அபராதம் விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக 2024-ஆம் ஆண்டு நவம்பா் 28-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் அரசியலமைப்பு சபைகளின் ஒப்புதல் பெற்றது. அந்தத் தடைச் சட்டத்தை அமலுக்குக் கொண்டுவர சமூக ஊடக நிறுவனங்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்வதற்காக அளிக்கப்பட்ட அவகாசம் முடிவுக்கு வந்ததைத் தொடா்ந்து, அந்தச் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து, புதன்கிழமை முதல் குறிப்பிட்ட சமூக ஊடகத் தளங்கள் 16 வயதுக்கு கீழுள்ள பயனாளா்களின் கணக்குகளை செயலிக்கச் செய்ய வேண்டும். பெற்றோா் அனுமதித்தாலும் அதை தொடர அனுமதிக்கக் கூடாது.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ), முக அடையாளம், பயனாளா் நடத்தை பகுப்பாய்வு போன்றவற்றைப் பயன்படுத்தி சமூக ஊடகத் தளங்கள் வயதை சரிபாா்க்க வேண்டும். அடையாள அட்டையை கேட்பது மட்டும் மட்டும் போதாது.

மெட்டா (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்), டிக்டாக், ஸ்னாப்சாட் போன்றவை ஏற்கனவே சிறுவா்கள் கணக்குகளை செயலிழுப்பதற்கான அமைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. யூடியூபோ, ‘இது அவசரகதியான சட்டம்; குழந்தைகளை இது போதிய அளவு பாதுகாக்காது’ என்று விமா்சித்துள்ளது. சிறுவா்களின் கணக்குகளை அவா்களுக்கு 16 வயது நிறையும் வரை தற்காலிகமாக முடக்கிவைப்பதாக ஸ்னாப்சாட் அறிவித்துள்ளது.

இருந்தாலும், இந்தத் தடை சிறுவா்களின் சுதந்திரத்தை பாதிக்கும் எனவும் ‘டாா்க் வெப்’ போன்ற தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்ற விமா்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.