குஜராத் அரசியலில் பரபரப்பு: முதல்-மந்திரியை தவிர மந்திரிகள் அனைவரும் ராஜினாமா.. இன்று மந்திரிசபை விரிவாக்கம்
ஆமதாபாத்,
பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம் முதல்-மந்திரி பூபேந்திர படேல் 2-வது முறையாக முதல்-மந்திரி பதவியை தக்க வைத்தார்.
அவரது மந்திரி சபையில் 16 மந்திரிகள் இடம் பெற்றிருந்தனர். இதில் 8 பேர் கேபினட் அந்தஸ்துடனும், மீதமுள்ளவர்கள் இணை மந்திரிகளாகவும் இருந்தனர். பூபேந்திர படேல் மந்திரிசபையில் இணை மந்திரியாக இருந்த ஜகதீஷ் விஸ்வகர்மா இந்த மாத தொடக்கத்தில் மாநில பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டார்.
மத்திய மந்திரி சி.ஆர்.பாட்டீல் வசம் இருந்த பா.ஜனதா தலைவர் பதவி, மாநில மந்திரியிடம் வழங்கப்பட்டது. குஜராத் சட்டசபை 182 உறுப்பினர்களை கொண்ட நிலையில், மாநில அரசில் 27 பேர் அல்லது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 15 சதவீதம் பேர் மந்திரிகளாக பதவி வகிக்க முடியும். அந்தவகையில் மாநில மந்திரி சபை இன்று (வெள்ளிக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படுவதாக நேற்று காலையில் மாநில அரசு தகவல் வெளியிட்டது.
அதற்கு வசதியாக முதல்-மந்திரி பூபேந்திர படேலை தவிர அவரது மந்திரிசபையில் இடம்பெற்றிருந்த 16 மந்திரிகளும் மாலையில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில் புதிய மந்திரிசபை இன்று காலை 11.30 மணியளவில் பதவியேற்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. புதிய மந்திரிசபையில் சுமார் 10 புதுமுகங்கள் இடம்பெறுவார்கள் என மாநில பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் நேற்று ராஜினாமா செய்தவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்காது என்றும் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. அவர்கள் கட்சிப்பணிகளுக்கு அனுப்பக்கூடும் என தெரிகிறது.
குஜராத் மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம் மாநிலத்தில் நேற்று பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருந்தது.