இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தேசிய விருது வழங்கும் நிகழ்வு – தேசிய ரீதியில் யாழ்ப்பாண மாவட்டம் முதலிடம்
சமூக பாதுகாப்பிற்கான தேசிய விருது வழங்கும் நிகழ்வு இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நேற்று(16.10.2025) திருகோணமலை தனியார் ஹொட்டலில் நடைபெற்றது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டம் பயனாளிகள் இணைப்பின் அடிப்படையிலும், பணச்சேகரிப்பின் அடிப்படையிலும் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. இவ் விருதினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பெற்றுக்கொண்டார். மேலும், இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தவிசாளர் டி.எம்.கே. திசாநாயக்க அவர்களினால் அரசாங்க அதிபர் கெளரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விருது வழங்கும் நிகழ்வில் பணச்சேகரிப்பின் அடிப்படையில் தேசிய மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் முறையே பருத்தித்துறை, நல்லூர், சண்டிலிப்பாய் பிரதேச செயலகங்கள் பெற்றுக்கொண்டன. இவ்விருதுகளை முறையே முன்னாள் பருத்தித்துறை பிரதேச செயலாளரும் தற்போதைய கௌரவ ஆளுநரின் செயலாளருமான திரு.எஸ். சத்தியசீலன் அவர்களும், நல்லூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் திருமதி.யசோதா உதயகுமார் அவர்களும் முன்னாள் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலரும், தற்போதைய மத்திய மாகாணத்தின் மாகாண சபை செயலகத்தின் செயலாளருமான திருமதி. சுபாஜினி மதியழகன் ஆகியோரும் பெற்றுக்கொண்டதுடன் இப்பிரதேச செயலகங்களின் உதவி பிரதேச செயலர்கள், சமூக பாதுகாப்பு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் கோப்பாய், உடுவில், கரவெட்டி, சாவகச்சேரி, வேலணை, தெல்லிப்பளை, சங்கானை பிரதேச செயகங்களும் தேசிய விருதிற்கான தகுதியினைப் பெற்று தேசிய விருதிற்கு தெரிவாகி இருந்தது. இவ்விருதுகளை பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
தனிப்பட்ட அடைவு மட்டங்களிற்கான தேசிய விருதினை 29 கிராம மட்ட உத்தியோகத்தர்களான கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பணச்சேகரிப்பின் அடிப்படையில் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தினை சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் சமூக பாதுகாப்பு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கை.வருணதாஸ் அவர்களும் தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தினை நல்லூர் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சுகுமாரன் அவர்களும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் தவிசாளர் டி.எம்.கே. திசாநாயக்க, பிரதி பொது முகாமையாளர் கல்தாரி டி சில்வா, கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் மோ.பிரகாஷ், சமூக பாதுகாப்பு உத்தியோகத்தர் சந்தைப்படுத்தல் திரு.லக்மால், அம்பாறை, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், சமுர்த்தி பணிப்பாளர்கள், திட்டப்பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள், உதவி பிரதேச செயலர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் , கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அமைச்சர் அவர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்தனர்.
இந் நிகழ்வு இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிரேஷ்ட இணைப்பதிகாரி பா.பிரதீபன் அவர்களினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








