அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (23.10.2025) யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், வேலைத் திட்டங்களை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிவுறுத்திய பிரதேச செயலாளர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துடன், முடிவுறுத்தாத வேலைத் திட்டங்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட்டு திட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீதி அபிவிருத்தி வேலைகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் வேலணை,ஊர்காவற்றுறை , காரைநகர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் நகர அபிபிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் பிரகாரம் யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களில் மீள் குடியேற்ற கிராமிய அபிவிவிருத்தி, வீதி அபிவிருத்தி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் கருத்திட்டங்கள், வடிகாலமைப்பு திட்டம், குழாய்க்கிணறு அமைப்பு, சூரிய மின்கலம் பொருந்தும் திட்டம் ஆகியவற்றின் முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி),பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ,உள்ளக கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர் , உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட, பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் துறைசார் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


