மீண்டும் மீண்டெழுவோம்! நம்பிக்கை துளிர்க்கட்டும்!
(எம்.மனோசித்ரா)
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள இயற்கைப் பேரிடர், நவீன வரலாற்றில் நாடு சந்தித்த மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாகும். ‘தித்வா’ (Ditwah) சூறாவளியின் விளைவாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட இந்த அனர்த்தம், முக்கியமான உட்கட்டமைப்புக்கள், வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை அழித்து, நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரலாறு கண்ட அழிவுகளும் இன்றைய நிலையும்
இலங்கை பல தசாப்தங்களாக வெள்ளம், வறட்சி, மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை அனர்த்தங்களை எதிர்கொண்டு வந்தாலும், அண்மைய ‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் ஒரு மாவட்டத்தைக் கூட விட்டு வைக்காமல் நாடளாவிய ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, 2004 ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தம் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய முதல் பெரும் துயரமாக இருந்தது. எனினும், தற்போதைய சூறாவளியானது நாட்டின் 25 மாவட்டங்களிலும் பரவலான பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திள் அறிக்கையின்படி, ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பல பாலங்கள், வீதிகள், மற்றும் மின்சார விநியோகக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த அனர்த்தமானது, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.
நேற்று புதன்கிழமை காலை வரையான நிலவரப்படி சுமார் 390 உயிர்களை இப்புயல் காவு கொண்டிருக்கிறது. அத்தோடு 352 பேர் காணாமல் போயுள்ளனர். 25 மாவட்டங்களிலும் 382,651 குடும்பங்களைச் சேர்ந்த 1,373,899 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 57,790 குடும்பங்களைச் சேர்ந்த 204,597 நபர்கள் 1,368 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 432 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 15,888 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. காணாமல் போனோரை தேடும் பணிகள் முப்படையினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சிகளின் கூட்டுப் பொறுப்பு
இந்த நெருக்கடியான சூழலில், அரசியல் கட்சிகள் தமது வேறுபாடுகளைக் கடந்து கைகோர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.
அரசாங்கத்தின் கடமைகள்: அனர்த்த மீட்சியின் மையப் பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது. உடனடியாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவான மனிதாபிமான உதவிகளை குறிப்பாக உணவு, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்டவை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். சேத மதிப்பீட்டை வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வதுடன், குறுகியகால மற்றும் நீண்டகால மறுசீரமைப்புத் திட்டங்களை வகுக்க வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில், நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் மற்றும் அனர்த்த எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த நீண்டகால முதலீடுகளைச் செய்ய வேண்டும். இந்த மீள் எழுச்சிப் பணிகளில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெறாமல் இருக்க மிகக் கடுமையான மேற்பார்வையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
எதிர்க்கட்சிகளின் பங்கு : எதிர்க்கட்சிகள் வெறுமனே விமர்சனம் செய்வதை விடுத்து, ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டும். மீள்கட்டுமானத் திட்டங்களுக்கு அவசியமான சட்ட மற்றும் நிதி ஆதரவை வழங்குவதுடன், அரசாங்கத்தின் மீட்சி முயற்சிகளில் குறைபாடுகள் இருந்தால், அதைத் தீர்வு சார்ந்த ஆலோசனைகளுடன் சுட்டிக்காட்ட வேண்டும். தங்கள் உறுப்பினர்களை மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பாகுபாடின்றி உதவிகளை வழங்குவதன் மூலம் நம்பிக்கையை பலப்படுத்தலாம். திங்களன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது நாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பேரழிவை சந்தித்துள்ள மக்கள் தொடர்பில் பேசுவதற்கு நேரம் ஒதுக்க மறுத்து அரசாங்கம் வரவு – செலவு திட்ட விவாதத்தை நடத்த முயற்சிப்பதாகக் குற்றஞ்சுமத்தி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
உண்மையில் இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தைக் கூட்டி அங்கு விவாதித்துக் கொண்டிருப்பதை விட, மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தமது நேரத்தை செலவிட வேண்டும். அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கலந்தாலோசிப்பதற்காக சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து உதவிகளைக் கோரியுள்ளமையும் பாராட்டுக்குரியது. இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் எதிர்க்கட்சிகள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும்.
சர்வதேச உதவிகளும் இந்தியாவின் ‘சாகர் பந்து’ நடவடிக்கையும்
ஒரு பெரிய பேரழிவு ஒரு தேசத்தின் வளங்களை எளிதில் செயலிழக்கச் செய்துவிடும். எனவே, சர்வதேச சமூகத்தின் ஆதரவு இன்றியமையாதது. நட்பு நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் மீட்பு நிபுணர்களை வழங்குவதன் மூலம் உதவலாம். அந்த வகையில் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மீட்பு பணிகள் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. நேபாளம், மாலைத்தீவு, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளும், சர்வதேச நிதி நிறுவனங்களும் தமது நிதி உதவிகளை அறிவித்துள்ளன.
குறிப்பாக, இந்தியாவின் விரைவான உதவி குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ (Neighbourhood First) கொள்கையின் கீழ், ‘சாகர் பந்து’ (Operation Sagar Bandhu) எனும் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண (HADR) ) நடவடிக்கையை உடனடியாகத் தொடங்கியது. தேசிய அனர்த்த மீட்புப் படை (NDRF) குழுக்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானப் படை விமானங்கள் மூலம் டன் கணக்கிலான நிவாரணப் பொருட்கள் (உணவு, கூடாரங்கள், மருத்துவ உபகரணங்கள்) மற்றும் மீட்புக் கருவிகள் விரைவாகக் கொண்டு வரப்பட்டன. அத்துடன், தேடல் மற்றும் மீட்புப் பணிகளில் இந்திய இராணுவ ஹெலிகொப்டர்கள் இணைந்து பணியாற்றுவது, இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியா இலங்கைக்கு வழங்கும் உறுதியான ஆதரவைக் காட்டுகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் விமானம் இந்திய வான்வெளி வழியாகப் பறக்க இந்தியா அனுமதி அளித்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட பதட்டங்களுக்கு மத்தியில் இது ஒரு அரிய மனிதாபிமான நடவடிக்கை.
பாகிஸ்தான் முதலாம் திகதி இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு இந்தக் கோரிக்கையைச் சமர்ப்பித்தது. விரைவான செயலாக்கத்திற்குப் பிறகு, மாலை 5.30 மணிக்கு இந்தியா அதற்கு அனுமதியளித்தது. அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகக் கூறும் அறிக்கைகள் துல்லியமற்றவை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பதட்டங்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர வான்வெளி மூடப்பட்டிருந்தாலும், இந்தியா இந்த போக்குவரத்துக்கு முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் ஒப்புதல் அளித்தமை இலங்கையர்களாகிய எமக்கு மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்வாகும்.
நம்பிக்கை துளிர்க்கட்டும்!
மீண்டு வருதல் என்பது வெறுமனே இடிபாடுகளை அகற்றுவது மட்டுமல்ல் அது சமூகத்தின் கூட்டு மன உறுதியையும் கட்டமைப்பதாகும். இந்த துயரத்திலிருந்து நாம் மீண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை ஒவ்வொரு இலங்கையரும் பெற வேண்டும். கடந்த காலங்களில் ஏற்பட்ட சுனாமி மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டெழுந்தது போல, தற்போதைய பேரழிவையும் ஒரு பலமான தேசமாக ஒன்றிணைந்து எதிர்கொள்வோம்.
அரசியல் தலைவர்கள் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடனும், அனைத்துக் கட்சிகளும் மக்களுடன் இணைந்து செயல்பட்டால், இலங்கை முன்னெப்போதையும் விட வலிமையாகவும், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாகவும் மீண்டெழும் என்பதில் ஐயமில்லை. இந்த மீள் கட்டுமானப் பயணம் நீண்டதாக இருக்கலாம், ஆனால் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் மூலம் நாம் வெற்றி பெறுவோம்.