மனைவிக்கு மயக்க ஊசி செலுத்தி கொன்றேன்.. கைதான டாக்டர் பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூரு,
பெங்களூரு மாரத்தஹள்ளி அருகே வசித்து வருபவர் மகேந்திர ரெட்டி. இவரது மனைவி கிருத்திகா ரெட்டி. இவர்கள் 2 பேரும் டாக்டர்கள் ஆவார்கள். கடந்த ஆண்டு (2024) மே மாதம் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் மகேந்திர ரெட்டியும், கிருத்திகாவும் டாக்டர்களாக பணியாற்றினார்கள். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி கிருத்திகா உயிரிழந்தார். அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதற்கிடையில், தடய அறிவியல் அறிக்கையில் கிருத்திகாவுக்கு மயக்க ஊசி செலுத்தியதால் பலியானது தெரியவந்தது. மேலும் கிருத்திகாவுக்கு மயக்க ஊசி செலுத்தி கொலை செய்ததாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு டாக்டர் மகேந்திர ரெட்டியை மாரத்தஹள்ளி போலீசார் கைது செய்தார்கள். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், தனது மனைவி கிருத்திகாவை மயக்க ஊசி செலுத்தி கொலை செய்ததை மகேந்திர ரெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். கிருத்திகா, மகேந்திர ரெட்டியின் செல்போன்களை ஆய்வு செய்த போது, கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே தனது நண்பருக்கு மனைவி கிருத்திகாவை கொன்று விட்டேன் என்று கூறி மகேந்திர ரெட்டி குறுந்தகவல் அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்திருந்தனர்.
அந்த ஆதாரத்தின் பேரில் விசாரித்த போது தான் அவர் மனைவியை மயக்க ஊசி செலுத்தி கொன்றதை ஒப்புக் கொண்டு இருந்தார். முதல் முறையாக 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த போது, போலீசாரிடம் எந்த தகவலையும் தெரிவிக்க மகேந்திர ரெட்டி மறுத்திருந்தார். 2-வது முறை காவலில் எடுத்து விசாரித்த போது தான் போலீசாரிடம் மகேந்திர ரெட்டி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அதில், எனக்கும், கிருத்திகாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு வாயு தொல்லை, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக கிருத்திகா பாதிக்கப்பட்டார். அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கிருத்திகாவுக்கு உடல் நிலை பாதிப்பு இருப்பது பற்றி, திருமணத்திற்கு முன்பாக அவரது பெற்றோர் என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டனர்.
மனைவிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், 2 பேரும் சேர்ந்து சுற்றுலாவுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எனது மகிழ்ச்சியை இழந்தேன். கிருத்திகாவை விவாகரத்து செய்துவிட்டு, வேறு பெண்ணை திருமணம் செய்தால், அவரது சொத்துகள் கிடைக்காது என்று நினைத்தேன். அவரது சாவு இயற்கையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால், நானே மருந்தகத்திற்கு சென்று மயக்க மருந்தை வாங்கினேன். ஏற்கனவே நான் டாக்டர் என்பதால், சிகிச்சைக்கு தேவைப்படுவதாக மருந்துக்கடைக்காரரிடம் தெரிவித்திருந்தேன். பொதுவாக ஒருவருக்கு 7 முதல் 8 மில்லி மயக்க மருந்து தான் கொடுக்க வேண்டும். ஆனால் கிருத்திகாவுக்கு 15 மில்லி மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தினேன்.
இயற்கையான முறையில் அவர் உயிரிழந்ததாக நம்ப வைத்து, கிருத்திகாவின் சொத்துகளை அடைய விரும்பினேன். ஆனால் தடய அறிவியல் அறிக்கையில் மயக்க ஊசி செலுத்தியதால் தான் கிருத்திகா உயிரிழந்திருப்பது தெரிந்துவிட்டது. இதனால் நான் சிக்கியுள்ளேன் என்று போலீசாரிடம் மகேந்திர ரெட்டி தெரிவித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், மகேந்திர ரெட்டியின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதைத்தொடர்ந்து, பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மாலையில் மகேந்திர ரெட்டி ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் முன்வராததால், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் மகேந்திர ரெட்டி அடைக்கப்பட்டார்.