உகாண்டாவில் 40 ஆண்டுகளாக அதிபராக இருக்கும் முசேவேனி ஆட்சி நீடிக்குமா? வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு!
கம்பாலா : உகாண்டாவில் அதிபா் மற்றும் நாடாளுமன்றத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஜன. 15) தொடங்கியது. சுமாா் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உகாண்டாவில், இந்தத் தோ்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா்.
இத்தேர்தலில் கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபா் யோவேரி முசேவேனி தற்போது 7-ஆவது முறையாகப் போட்டியிடுவதால் இத்தோ்தல் சா்வதேச அளவில் கூடுதல் கவனத்தை ஈா்த்துள்ளது.
தோ்தல் தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே, நாடு முழுவதும் இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலையில் 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல இடங்களிலும் வாக்குச்சாவடி மையங்கள் காலையில் தாமதமாகவே திறக்கப்பட்டதால் வாக்காளர்கள் காத்திருக்கும் நிலைமை ஏற்பட்டது.