யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள்: வினைத்திறனாகச் செயற்பட பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்!
;
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (30.01.2026) மு.ப 10.30 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், கடந்த வருடம் நிறைவேற்றிய அபிவிருத்தித் திட்டங்களை அனுபவமாகக் கொண்டு, இவ்வாண்டு மேன்மேலும் வினைத்திறனாக செயற்பட வேண்டும் என பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தியதுடன், அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய திட்டங்களை பதிவேற்றம் செய்வதை துரிதப்படுத்த வேண்டிய தேவை காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் புள்ளிவிவர தரவுகள் தொடர்பாக தரவுத்தளம் (Database) ஒன்றை அமைப்பது தொடர்பாகவும், இவ்வாண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய அபிவிருத்தி திட்டங்களில் மக்களின் சமூக , பொருளாதாரத்தை மேம்படுத்தும் 15 திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பாகவும் அரசாங்க அதிபர் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், , பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், விவசாய பணிப்பாளர், மாவட்ட பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக பிரதி,உதவி, திட்டமிடல் பணிப்பாளர்கள் ,மாவட்டச் செயலக துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.