விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
பாராமதி: மகாராஷ்டிராவில் விமான விபத்தில் உயிரிழந்த துணை முதல்வர் அஜித் பவாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் பாராமதியில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் மும்பையில் இருந்து பாராமதிக்கு ‘லியர்ஜெட் 45’ ரக விமானத்தில் சென்றார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், பைலட்கள் கேப்டன் சுமித் கபூர், சாம்பவிபதக், விமான உதவியாளர் பிங்க்கி மாலி ஆகிய 4 பேரும் சென்றனர்.
அஜித் பவார் சென்ற விமானம் பாராமதி விமான நிலையத்தை நெருங்கியபோது, பனி மூட்டம் காரணமாக ஓடு பாதை தெரியவில்லை. இதனால் விமானம் வானில் வட்டமடித்து மீண்டும் தரையிறங்க முயன்றது. அப்போது, ஓடுபாதையில் இருந்து 200 மீட்டர் தொலைவில் விமானம் தரையில் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில், விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர்.
அஜித் பவாரின் மறைவு தேசிய வாத காங்கிரஸ் தொண்டர்களிடம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
தொண்டர்கள் முழக்கம்: இந்நிலையில், இறுதிச் சடங்குகளுக்காக பாராமதியில் உள்ள அஜித் பவாரின் கதேவாடி கிராமத்தில் இருந்து வித்ய பிரதிஸ்தான் மைதானத்துக்கு தேசியக்கொடி போர்த்தியபடி அவரது உடல் நேற்று காலை வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பாராமதி அஜித் பவாரின் முன்னாள் தொகுதி என்பதால், தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். ‘அஜித் தாதா அமர் ரஹே’ என அவர்கள் கோஷம் எழுப்பியபடி இறுதிச் சடங்கில் பங்கேற்றனர். தகன மேடைக்கு அஜித் பவார் உடல் கொண்டு வரப்பட்டதும், தொண்டர்களின் முழக்கம் இன்னும் அதிகரித்தது. இதனால் அனைவரும் அமைதி காத்து, இறுதி அஞ்சலி செலுத்துமாறு ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இறுதிச் சடங்குகள் நடைபெற்றபோது, சரத் பவாரின் மனைவி சுனேத்ரா கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். அவருக்கு சரத் பவாரின் மகளும், மக்களவை எம்.பி.யுமான சுப்ரியா சுலோ ஆறுதல் கூறியபடி இருந்தார். அஜித் பவாரின் இரு மகன்கள் பர்த் மற்றும் ஜெ ஆகியோர் இறுதிச் சடங்குகளை செய்து சிதைக்கு தீ மூட்டினர். அஜித் பவார் உடலுக்கு, மகாராஷ்டிரா போலீஸார் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர்.
தலைவர்கள் இறுதி அஞ்சலி: இறுதிச் சடங்கில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, முரளிதர் மொகோல், பாஜக தலைவர் நிதின் நவீன், அஜித் பவாரின் சித்தப்பா சரத் பவார் ஆகியோர் பங்கேற்றனர். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர்கள் சுஷில் குமார் ஷிண்டே, அசோக் சவான், ஆந்திர பிரதேச அமைச்சர் நாரா லோகேஷ் உட்பட பலர் இறுதிச் சடங்கில் பங்கேற்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் உத்தவ் தாக்கரே, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் கதேவாடி கிராமத்தில் உள்ள அஜித் பவாரின் இல்லத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.