கைது செய்யப்பட்டவர்களுக்கு நிவாரணம் இல்லை ; நீதி அமைச்சின் அதிரடித் தகவல்
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு, எந்தவித நிவாரணமும் வழங்கப்படாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனினும், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்படாதவர்களின் தகவல்கள் இருந்தால், அது குறித்து ஆராய்வதாகவும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து, சூரியன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போதே, அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
அதற்கமைய, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் என பலதரப்பட்ட தரப்புகளும் தங்களுடைய கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.
அதற்கு பின்னர், சட்டவரைபு குழுவை கூட்டி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள், வழக்கு விசாரணைகளின் கீழ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.