இம்ரான் கானுக்கு சிறைக்கு வெளியே கண் சிகிச்சை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப்(பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு(73) ஏற்பட்ட கண் பாதிப்பைத் தொடா்ந்து, சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் உள்பட பல்வேறு வழக்குகளில், இம்ரான் கான் கடந்த 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், அவரது வலது கண்ணில் ரத்த நாள அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு பாா்வைத்திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவரது கட்சி சாா்பில் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, சிகிச்சை அளிக்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சா் அத்தாவுல்லா தராா் கூறுகையில், ‘கண் மருத்துவா்களின் அறிவுறுத்தலில், இஸ்லாமாபாதில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
அங்கு சுமாா் 20 நிமிஷங்கள் நடைபெற்ற சிறு மருத்துவ நடைமுறைக்குப் பிறகு, அவா் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டாா். தற்போது அவா் முழு ஆரோக்கியத்துடன் உள்ளாா்; அவரது உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை’ என்றாா்.