இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் தற்சமயம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பயணிகள் காத்திருப்பு பகுதியின் புனரமைப்பு பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதையும் காணமுடிகிறது.
அதேசமயம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பான ஆராய்ந்து வருகிறோம். கடந்தகால அரசாங்கங்களால் விமான நிலையம் ஆரம்பிக்கப்பட்டாலும், அது முழுமையான விமான நிலையமாக மாறவில்லை.
இந்நிலையில் நாம் அந்த குறையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முழு வீச்சில் எடுத்திருக்கின்றோம். தற்போதும் இலாபத்தில் இயங்கும் யாழ்.சர்வதேச விமான நிலையம் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக..மிக.. காத்திரமான பங்களிப்பை வழங்கப்போகிறது.
அதேபோல் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளை விரிவு படுத்துவது தொடர்பில் ஆராய்ந்துவரும் அதேவேளை மயிலிட்டி துறைமுக அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக சுமார் 400 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டாலும், அதனுடைய அபிவிருத்தி பணிகளில் இடைநடுவில் விடப்பட்ட நிலையில் நாட்டினுடைய ஜனாதிபதியே அநுரகுமார திசாநாயக்க அதனை மேற்கொள்வதற்காக வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கி உள்ளார். யாழ்.கொழும்புத் துறை இறங்குதுறை மற்றும் குறிக்காட்டுவான் இறங்குதுறை அபிவிருத்திகள் இந்த வருட இறுதிக்குள் முடிவுறுத்தப்படும்.
எமது அரசாங்கம் நாட்டில் வாழுகின்ற சகல இன மத மக்களை இணைத்துக் கொண்டு புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு அரசாங்கமாக ஆட்சிக்கு வந்ததுள்ளது. அரசாங்கத்தின் பயணத்தை தடுத்து நிறுத்தலாம் என சிலர் நினைக்கிறார்கள். காரணம் கடந்த காலங்களைப்போல திருடர் யுகம் ஒன்றை மீண்டும் கொண்டு வருவதற்காக துடிக்கிறார்கள். இந்த நாட்டை மீண்டும் ஒரு அழிவுப் பாதையில் இட்டுச் செல்வதற்கு இன்னும் சிலர் இனவாதத்தை கையில் எடுக்கிறார்கள்.
ஆகவே, வடக்கு மக்களுக்கு தெளிவாக ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். எமது அரசாங்கம் மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் ஒரு அரசாங்கமாக செயல்படும் அதேவேளை அபிவிருத்தி பணிகளையும் தொடர்சியாக முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.