யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களளை அடையாளம் காண்பதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் பங்குபற்றுதலுடன் நேற்றைய தினம் (06.02.2026) மு. ப 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசந்திரமூர்த்தி றஜீவன் , அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைய, 2027 மற்றும் 2028 ஆண்டுகளில் காலத்திற்கு பொருத்தமான திட்டங்களை நடைமுறைப்படுத்த அடையாளம் காண வேண்டும் எனவும், இதன் மூலம் வேலைவாய்ப்புக்கள் உருவாக வேண்டும் எனவும், இதன் மூலம் வறுமையற்ற நிலை உருவாகும் எனவும் தெரிவித்தார். மேலும், இக் கலந்துரையாடலில் பங்குபற்றியுள்ளவர்களின் அறிவினை பகிர்ந்து கொள்வதே இக் கூட்டத்தின் நோக்கம் எனவும், வறுமை ஒழிப்பு, கிளீன் ஸ்ரீலங்கா, டியிற்றல் மயமாக்கல் என்ற அரசாங்க கொள்கையுடன் இணைந்தவகையில் சுற்றுலாத்துறைசார்ந்த திட்டங்கள், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு போன்ற அபிவிருத்தித் திட்டங்களையும் அடையாளம் காண வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் , அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடைமுறைப்படுத்த சிறப்பான பெரிய திட்டத்திற்கான முன்மொழிவினை கோரியதாகவும், அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது நடைமுறைக்கு சாத்தியமான நிலைத்திருக்கக் கூடிய திட்டங்களை அடையாளம் காண வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், நிலைத்திருக்கக் கூடி பயனுறுதி வாய்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்க அதிகாரிகளுக்கு உண்டு எனவும், திட்டங்கள் தோல்வி அடையாமல் இருப்பதனை அரசாங்க அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள் ஆரம்ப கட்டமாக ஆராயப்பட்டு பல கருத்துக்கள் ஆரோக்கியமாக பகிரப்பட்டன.
இக் கலந்துரையாடலில் வடமாகாண பிரஜாசக்தி தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் எஸ். கபிலன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்களின் இணைப்பாளர் எஸ். சிறிவாகீசன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், மாவட்ட பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், பிரதேச செயலாளர்களுடன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
