யாழ்ப்பாணத்திலுள்ள 33 சமுர்த்தி வங்கிகளும் இலாபகரமாக இயங்கிக் கொண்டிருப்பதாக அரசாங்க அதிபர் பெருமிதம்
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களமும் சமுர்த்தி வங்கி சுன்னாகமும் இணைந்து நடாத்தும் தேசிய பொங்கல் விழா உடுவில் பிரதேச செயலாளர் பிறேமினி பொன்னம்பலம் தலைமையில் நேற்றைய தினம் (06.02.2026 ) காலை 09.00 மணிக்கு சுன்னாகம் சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு விருந்தினர்களாக சமுர்த்தி திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் M.G.S.S கித்சிறி, பிரதிப் பணிப்பாளர் (குறுநிதி) மகேஷ் பெர்ணாண்டோ, யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ. ஸ்ரீவர்ணன் கலந்து சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றுகையில், யாழ்ப்பாண மாவட்டம் சமுர்த்தி சார்ந்த செயற்பாடுகள் மிக நீண்ட காலமாக மிகச் சிறப்பான நிலையை அடைந்து வருவதாகவும், அதற்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் விசேட அம்சமாக தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட சுன்னாகம் சமுர்த்தி வங்கியில் பொங்கல் நிகழ்வு இடம் பெற்றுக் கொண்டிருப்பது மேலும் மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும், சுன்னாகம் சமுர்த்தி வங்கியினை பொறுத்தவரை நீண்ட காலமாக குறிப்பாக ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரையும் போட்டி நிகழ்ச்சிகளிலும் 2025 ஆம் ஆண்டு போட்டிகளிலும் உயர்ந்த நிலையில் காணப்படுவது வரவேற்கத்தக்க விடயம் எனவும், 2025 ஆம் ஆண்டு சமுர்த்தி கணிப்புகளின் பிரகாரம் யாழ்ப்பாணம் மாவட்டம் 33 சமுர்த்தி வங்கிகளும் இலாபகரமாக இயங்கிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி யான விடயம் என்பதுடன் வினைத்திறனாக செயற்பாட்டை காட்டி நிற்பதாகத் தெரிவித்தார்.
மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்தகைய மதிப்புகளை சமுர்த்தி திணைக்களம் பெற்றுக் கொண்டிருப்பது அதனுடைய பிரதிபலன் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்தாலும் வெளிப்பாடு அதனை நம்பி இருக்கும் மக்களுக்கு கிடைப்பது தான் மகிழ்ச்சிக்குரிய விடயம் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும் சமுர்த்தி சார்ந்த கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டவர்களில் வறுமைக்குட்பட்டவர்களாகவும் நலிவுற்ற மக்களாகவும் காணப்படுவதாகவும், எனினும் கொடுப்பனவு முறைமை மாற்றப்பட்டு அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபையின் ஊடாக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற போதிலும் ஏற்கனவே சமுர்த்தி பயனாளிகள் அதற்குள் உள்வாங்கப்பட்டிருப்பது சிறப்புக்குரிய விடயம் எனவும் தெரிவித்தார்.
மேலும், இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்து அரச கொள்கைத் திட்டங்களிலும், டித்வா புயல் வெள்ள அனர்த்தம் மற்றும் பிரஜாசக்தி திட்டங்களிலும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்வாங்கப்பட்டு அதனூடாகவே மதிப்பீட்டு முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதனூடாக அப்பணியின் உயர்ச்சி நிலையை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கிராம மட்டத்தில் ஆற்றுகின்ற செயற்பாடுகள் ஒவ்வொரு பாமர மக்களின் வாழ்விலும் மேம்பாட்டை அடையச் செய்யக்கூடியதாக – அதற்கான மாற்றத்திற்கான புள்ளியாக நாம் செயற்பட வேண்டும் எனவும்,
சமுர்த்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்களால் ஆற்றிய செயற்பாடுகளுக்கான கௌரவம் தேசிய ரீதியில் கௌரவத்தை பெறுவதற்கு வழி வகுத்ததாகவும் யாழ்ப்பாணம் மாவட்டம் முதல் நிலை பெற்றமைக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி முகாமையாளர்கள்,மாவட்ட பணிப்பாளர் மற்றும் அதனுடன் இணைந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் சரியான முறையில் ஆற்றுப்படுத்தி செயற்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, அரச சார்ந்த செயற்பாடுகளில் மக்கள் நலன் சார்ந்ததாக காணப்படும் போது செயற்பாட்டு முறைமை க்குரியவர்களாக மாற்றப்பட வேண்டும் எனவும், சரியான முறையில் வழிப்படுத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளவதன் மூலம் நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்பாடடைய செய்து அனைத்து மக்களது வாழ்விலும் சுபீட்சத்தை ஏற்படுத்த முடியும் எனவும் இதற்கு மாவட்ட பணிப்பாளர், பிரதேச செயலாளர் முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு இணங்க அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துக்களை கூறி அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்களை அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு கொடிதின சேகரிப்பில் அதிக நிதியினை சேகரித்த முதல் 06 உத்தியோகத்தர்களுக்கான விருதுகள், ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயற்றிட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் கடன் நிதி வழங்கல் என்பன பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்களாலும் சிறப்பு விருந்தினர்களாலும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்களும் மற்றும் சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
