கிழக்கு மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத்தளத்தை ஆட்டிப்படைக்கும் நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்கள்
கிழக்கு மாகாணத்தின் பிரபல்யமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான காத்தான்குடி கடற்கரையில், நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்களின் தொல்லையினால் அங்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், காலை மற்றும் மாலை வேளைகளில் உடற்பயிற்சிக்காக வரும் பொதுமக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்குச் சுற்றுலா வரும் அதிகளவிலான உள்நாட்டுப் பயணிகள் காத்தான்குடி கடற்கரைக்கு வருகை தருகின்றனர். இங்கு அவர்களின் வசதிக்காக 50-க்கும் மேற்பட்ட வரவேற்பு மண்டபங்களும், தங்குமிட விடுதிகளும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
பெரும் அச்சுறுத்தல்
இவ்வாறான நிலையில், காத்தான்குடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உடற்பயிற்சியாளர்களுக்குக் குறித்த கட்டாக்காலி நாய்களினால் பெரும் அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் இவை மனிதர்களைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, குறித்த நாய்களைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனச் சுற்றுலாப் பயணிகளும் உடற்பயிற்சியாளர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.