ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய தாக்குதல்: இதுவரை கொல்லப்பட்ட 8500 ரஷ்யர்கள்
உக்ரைனுக்கு எதிரான போரில் இதுவரை 8,500 ரஷ்ய பொதுமக்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் உயிரிழப்புகள்
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை முடிவின்றி நடந்து வருகிறது.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் 2022 பிப்ரவரி முதல் 2026 ஜூன் வரை ரஷ்யாவிற்கு சொந்தமான எல்லைக்குள் உக்ரைனிய ராணுவம் நடத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட 8,500 பேர் கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 373 பேர் குழந்தைகள் என்றும், இந்த போரில் ஒட்டு மொத்தமாக 30,913 பேர் படுகாயமடைந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 3 மாதங்களில் மட்டும் ரஷ்யாவின் 42 பிராந்தியங்களில் உள்ள பொதுமக்களின் குடியிருப்பு கட்டிடங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு உரிய சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு ரஷ்யா கடிதம் எழுதியுள்ளது.
இதற்கிடையில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரைனின் முக்கியமான ராணுவ தளம் அமைந்துள்ள கான்ஸ்டாண்டினோவ்கா நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.