;
Athirady Tamil News

ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டாரா..? நெதன்யாகு வெளியிட்ட தகவலால் அதிகரிக்கும் பதற்றம்

0

தெஹ்ரான்,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனிடையே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இதில், பாதுகாப்பு மந்திரியாக பொறுப்பேற்பதற்கு முன்பு ஈரானிய ஆயுத படைகளுக்கான துணை தலைமை தளபதியாக அமீர் இருந்தார். அவர் போர் விமானியாக தனது ராணுவ பணியை தொடங்கினார். இது தெஹ்ரானின் தலைமைக்கு பெரியதொரு அடியாகும்.

2025-ம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எனப்படும் ஈரானிய படையின் பொறுப்பை பாக்பூர் ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்பு தளபதியாக இருந்த உசைன் சலாமி மரணம் அடைந்த நிலையில், பாக்பூர் அந்த பதவியை வகித்து வந்து உள்ளார். இந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டு உள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் – அமெரிக்க படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. தெஹ்ரானுக்குள் அமெரிக்க போர் விமானங்கள் நுழைந்து சரமாரியாக குண்டுகளை வீசியது. குறிப்பாக அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனியின் வீடு, தலைமையகம், அதிபர் மாளிகை மற்றும் ஈரான் உளவுத்துறை கட்டிடம் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் அந்த கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்கா-இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார் என்றும், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி பதற்றத்தை அதிகரிக்க செய்திருந்தது. ஆனால், இதனை ஈரான் வெளியுறவு அமைச்சர் அயதுல்லா மறுத்துள்ளார். இஸ்ரேலின் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், 86 வயதான கமேனி கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே இது தொடர்பாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், “ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி இப்போது இல்லை என்பதற்கான பல சாத்திய கூறுகள் உள்ளன. ஆனால் அவரது மரணத்தை வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை. கமேனியின் வளாகம் அழிக்கப்பட்டது, புரட்சிகர காவல்படை தளபதிகள் மற்றும் மூத்த அணுசக்தி அதிகாரிகள் அழிக்கப்பட்டனர்.

ஈரானுக்கு எதிரான நடவடிக்கை “தேவைப்படும் வரை” தொடரும். ஈரானிய மக்கள் “கொடுங்கோன்மையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள” இது உதவும். ஈரானிய ஆட்சியை கவிழ்க்க அவர்களின் “தலைமுறைக்கு ஒருமுறை கிடைத்திருக்கும் வாய்ப்பு இது. நீங்கள் ஒன்றிணைந்து “ஒரு வரலாற்றுப் பணிக்காக ஒன்றுபட வேண்டிய நேரம் இது” என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் – இஸ்ரேல் மோதல் தொடர்ந்து வருவதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.