;
Athirady Tamil News

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் புதிய திருப்பங்கள்!

0

இலங்கையின் அண்மைக்கால அரசியல் மற்றும் பாதுகாப்புப் பரப்பில், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மிக முக்கியமானதொரு திருப்புமுனையை எட்டியுள்ளது. கடந்த காலங்களில் மர்மங்கள் துலக்கப்படாமல் இழுபறி நிலையில் காணப்பட்ட இவ்விசாரணைகள், தற்போதைய அரசாங்கத்தின் நேரடி வழிகாட்டலின் கீழ், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், தென்னிலங்கை அரசியல் களத்திலும், நீதித்துறை வட்டாரங்களிலும் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்ட சுரேஷ் சலே, தனக்கு இழைக்கப்படும் மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கு எதிராகவும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராகவும் சிறைக்குள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவரது குடும்பத்தினரும், சில அரசியல் தரப்பினரும் செய்தியாளர் சந்திப்புக்களின் மூலம் அண்மையில் அறிவித்திருந்தனர்.

சுரேஷ் சலேயின் உடல்நிலை மற்றும் மனநிலை கடுமையாக மோசமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, அவரை உடனடியாகச் சுயாதீன மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அவரது சட்ட ஆலோசகர் அஜித் ஸ்ரீவர்த்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவிடம் அவசரக் கோரிக்கை விடுத்திருந்தார். அத்துடன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தனது கணவர் அனுபவித்து வரும் மனிதாபிமானமற்ற நடத்தைகள் குறித்து சுயாதீன குற்றவியல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி சுரேஷ் சலேயின் மனைவி பொலிஸ் மா அதிபருக்கு அவசரக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில், ஒரு அதிரடித் திருப்பமாக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இருப்பினும், சட்டம் தன் கடமையைச் செய்யும் போது, இவ்வாறான உத்திகள் மூலம் விசாரணைகளின் போக்கை மாற்றுவதற்கோ அல்லது மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்துவதற்கோ அனுமதிக்க முடியாது என்பதே பொதுவான சட்ட வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. சிறைச்சாலைச் சட்டதிட்டங்களின்படி, கைதிகளுக்கான வழக்கமான பாதுகாப்புச் சோதனைகளே அவருக்கும் நடத்தப்பட்டதாகத் குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தரப்புகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் சர்வதேசப் புலனாய்வாளர் ஹன்சீர் அசாத் மௌலானாவின் வாக்குமூலங்களுக்கு அப்பாற்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 25 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையின் அடிப்படையில், சுரேஷ் சலேயின் கைதுக்கு மூன்று முக்கிய காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன:

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவல் வழங்குநரான ‘பெத்தா’ என்ற நபர் மூலம், கட்டுவாபிட்டிய தேவாலயத் தற்கொலை குண்டுதாரியான ஹஸ்தூனுக்கு (சாரா ஜாஸ்மினின் கணவர்) இலக்குகள் காண்பிக்கப்பட்ட விவகாரத்தில் சுரேஷ் சலேயின் நேரடித் தொடர்பு குறித்து சிஐடி விசாரித்து வருகிறது. 2019 மார்ச் மாதம் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரித்த பாணந்துறையைச் சேர்ந்த ‘ரூமி’ என்ற தகவல் வழங்குநரை, தாக்குதலின் பின்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் ஒப்படைத்து, அவரது குடும்பத்தினருக்குச் சலுகைகளை வழங்கி உண்மைகளை மறைக்க முற்பட்டமை. சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் ‘சாரா ஜாஸ்மின்’ உயிரிழக்கவில்லை எனப் பல சாட்சியங்கள் தெரிவிப்பினும், அப்போதைய அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மூன்றாவது முறையும் DNA பரிசோதனையை மேற்கொள்ள சிஐடிக்கு அழுத்தம் கொடுத்து, அவர் உயிரிழந்துவிட்டதாக போலியான முடிவை அறிவிக்கச் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்விசாரணைகளின் மிக அதிரடியான திருப்பமாக, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் இணைந்து ஆயுதப் பயிற்சிகளைப் பெற்ற முக்கிய நபர் ஒருவர் மாறியுள்ளார். கொழும்பு நீதிமன்றத்தில் நள்ளிரவு 12 மணி வரை நீடித்த விசேட இரகசிய அமர்வின் போது, அவர் மிகத் தீர்க்கமான வாக்குமூலங்களை வழங்கியுள்ளார். சஹ்ரானின் பயிற்சி முகாம்கள், ஆயுத விநியோக வலையமைப்புகள் மற்றும் அவற்றுக்குப் பின்னால் நிழல் போலச் செயற்பட்ட புலனாய்வு அதிகாரிகள் யார் என்பது குறித்து, ஆதாரங்களுடன் அவர் நீதிமன்றத்தில் விரிவான தகவல்களைச் சமர்ப்பித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் பின்னரே, முன்னாள் அதிகாரத் தரப்பினரிடையே பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாட்சியின் பாதுகாப்பு கருதி அவரது பெயர் மற்றும் அங்க அடையாளங்கள் முற்றுமுழுதாக இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றது.

“ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகள் மற்றும் அவர்களுக்குத் துணையாக நின்ற வலையமைப்புகள் அனைவரையும் மக்கள் முன் நிறுத்தித் தண்டிக்கும் வரை இந்த அரசு ஓயாது” என அண்மையில் வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டிருந்த கூற்றை தற்போதைய நகர்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகி, பதவிகளை இழந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகர போன்றோர் தற்போது மீண்டும் சட்டத்தை நிலைநாட்டும் பொறுப்பில் உள்ளதால், விசாரணைகள் எவ்வித தொய்வுமின்றி நகர்கின்றன.

பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின், குற்றம் சாட்டப்பட்டவர்களின் அதிகாரப் பின்னணியோ, அவர்களது உடல்நிலை சார்ந்த நெருக்கடிகளோ அல்லது குடும்பத்தினரின் உணர்ச்சிபூர்வமான கோரிக்கைகளோ சட்டத்தின் பார்வையில் குறுக்கிடக் கூடாது. கடுமையான சட்ட அமுலாக்கமும், வெளிப்படையான நீதிமன்ற விசாரணைகளும் மட்டுமே எதிர்காலத்தில் இவ்வாறான நாசகாரச் செயல்கள் மீண்டும் இலங்கை மண்ணில் நிகழாமல் தடுப்பதற்கான ஒரேயொரு கேடயமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.