;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1829469.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

ரமழான் காலத்தில் நோன்புக்கஞ்சி சிற்றூண்டி உணவுப் பண்டங்கள் விற்பனை

0

புனித நோன்பு காலத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிகளவான மிக ருசியான சிற்றூண்டிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு வருகின்றனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு சிற்றூண்டி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இம்மாவட்டத்தின் பொத்துவில் ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, பாலமுனை ,ஒலுவில், நிந்தவூர், அட்டப்பளம் , மாளிகைக்காடு ,சம்மாந்துறை ,மத்திய முகாம் ,இறக்காமம், நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மாவடிப்பள்ளி, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி,மருதமுனை,பெரியநீலாவணை முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவ்வாறு சிற்றூண்டி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

இது தவிர கோழி இறைச்சி சம்சா, முட்டை சம்சா, மாட்டு இறைச்சி சம்சா, சமன்ரின் றோல்ஸ் , பற்றீஸ், றோல்ஸ், பருப்பு வடை, இறால் வடை, உழுந்து வடை, பேஸ்டி, சுருட்டு அப்பம், வண்டப்பம், சான்வீச், கொச்சிக்காய், தயிர் வடை, மாசி வடை ,மாசி கட்லட், இறைச்சி கட்லட், முட்டை கட்லட், பீசா ,பர்கர், போன்ற வெதுப்பக சிற்றூண்டிகளும் அமோக விற்பனையாகி வருகின்றன.

கடந்த புனித நோன்பு பெப்ரவரி மாதம் 19 ஆந் திகதி ஆரம்பமான நிலையில் இச்சிற்றூண்டிகளுக்கான கிராக்கி மக்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இச்சிற்றூண்டி வகைகளை குடும்ப சகிதம் நோன்பு திறக்கவும் நிறுவனம் மற்றும் அமைப்பு ரீதியாக நோன்பினை திறக்கவும் கொள்வனவு செய்வதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

மேற்குறித்த சிற்றூண்டி வகைகள் யாவும் 40 ருபா முதல் 100 ரூபா வரை அதன் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இச்சிற்றூண்டி வகைகள் யாவும் கவர்ச்சியாக கண்ணாடி அலுமாரியில் அடுக்கப்பட்டு மக்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் வீதியோரங்களில் வைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நோன்புக்கஞ்சி சிற்றூண்டி உணவுப் பண்டங்கள் மனித பாவனைக்கு உகந்ததா இல்லையா என்பதை பரிசோதனை மேற்கொள்வதற்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் ஆலோசனைக்கமைய சுகாதார வைத்திய அதிகாரிகள் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோரால் ரமழான் காலத்தில் விற்பனை செய்யப்படும் உணவுப் பண்டங்கள் கஞ்சி விநியோகம் போன்ற விடயங்களில் சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு விடயங்களை நடைமுறைப்படுத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

இம்முறை பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்தல்- பிளாஸ்டிக் வாளிகளில் கஞ்சி வழங்குவதை முற்றாக நிறுத்துதல்- தனிநபர் சுகாதாரம் பேணி கெப் ஏப்ரன் அணிதல் -கஞ்சி தயாரிக்குமிடங்களை சுத்தமாக பேணுதல்- சுத்தமான உணவுப்பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான நபர்கள் மூலம் கஞ்சி தயாரித்தல்- உணவைக் கையாள்பவர்களுக்கான மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளல்- பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூலமாக கஞ்சி விநியோகத்தை பரிசீலனை செய்தல் – சிற்றுண்டி உணவகங்கள் கண்ணாடிப் பெட்டியில் உணவை காட்சிப்படுத்தல்- சிற்றுண்டி தயாரிப்பை செய்பவர்கள் மருத்துவ சான்றிதழ் பெறல் கையுறை தொப்பி போன்றவை கட்டாயமாக அணிதல்- வாடிக்கையாளர் உணவை தெரிவதை தடுத்தல்- ரமழான் காலத்தில் மட்டும் சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்பவர்கள் தங்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளல் உள்ளிட்ட நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அமுல்படுத்தப்பட்ட விடயங்களை மீறி நடப்பவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கெதிரான சட்ட நடவடிக்கைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.