ஈரான் உடனான போர் 4 வாரங்கள் நீடிக்கலாம்: ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: ஈரான் – அமெரிக்கா இடையே நிலவி வரும் போர்ச் சூழல் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய ராணுவ நிலவரத்தைக் கணக்கில் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ட்ரம்ப், இது தாங்கள் எதிர்பார்த்ததை விடப் மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில், இந்தப் போரில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதை அவர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் மிகச்சிறந்த வீரர்கள் என்று புகழாரம் சூட்டிய ட்ரம்ப், போர்க்களத்தில் இத்தகைய உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானவை எனினும் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறித்துக் கேட்கப்பட்டபோது, “அவர்கள் இப்போது பேச விரும்புகிறார்கள், ஆனால் கடந்த வாரமே பேசியிருக்க வேண்டும்” என்று பதிலளித்த அவர், தற்போதைக்குத் தாக்குதல்கள் தொடரும் என்று உறுதிபட தெரிவித்தார்.
அணு ஆயுதம் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டுள்ள ஈரான், நாகரீக உலகிற்கே பெரும் அச்சுறுத்தல் என்பதால் இந்தத் தாக்குதல் அவசியமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகளின் தலைவர்களுடன் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும், அமெரிக்கப் படைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விரைவில் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார மையங்களைக் குறிவைத்துத் தொடர்ந்து துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்படும் என்பதால், வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் இன்னும் சில வாரங்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “9 ஈரானிய கடற்படை கப்பல்களை நாங்கள் அழித்து மூழ்கடித்துவிட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது, அவற்றில் சில ஒப்பீட்டளவில் பெரியவை மற்றும் முக்கியமானவை. மீதமுள்ளவற்றை நாங்கள் தேடி வருகிறோம்.
அவை விரைவில் கடலின் அடிப்பகுதியில் மிதக்கும். ஒரு வித்தியாசமான தாக்குதலில், அவர்களின் கடற்படை தலைமையகத்தை நாங்கள் பெருமளவில் அழித்து விட்டோம். அதைத் தவிர, அவர்களின் கடற்படை மிகச் சிறப்பாக செயல்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.