;
Athirady Tamil News

விமானப்படை தளத்தை பயன்படுத்த அமெரிக்காவுக்கு மறுப்பு தெரிவித்த ஸ்பெயின் – கொந்தளித்த டிரம்ப்

0

வாஷிங்டன்,

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28-ம்தேதி அதிரடி தாக்குதல் நடத்தின. ஈரானின் அணுசக்தி மையங்கள், அணுசக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதற்கிடையே, ஈரான் மீதான தாக்குதல்களுக்குத் தங்களின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு, ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்துள்ளது. அமெரிக்காவும், ஸ்பெயினும் ‘நேட்டோ’ கூட்டமைப்பில் உள்ளன நாடுகள் என்பதால், அமெரிக்கா தனது போர் விமானங்களை ஸ்பெயினின் ரோடா மற்றும் மோரோன் ராணுவ தளங்களில் நிறுத்தி வைத்திருந்தது.

இந்த போர் விமானங்களை கொண்டு ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டது. இதற்கு தங்களின் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு, ஸ்பெயின் அனுமதி மறுத்தது. இதனால் வேறு வழியின்றி அமெரிக்க தனது போர் விமானங்களை ஸ்பெயினில் இருந்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு தங்களது விமானப்படை தளத்தை பயன்படுத்த ஸ்பெயின் மறுத்த நிலையில், ஸ்பெயின் உடனான வர்த்தக உறவை முற்றிலுமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும் அவர், “எங்களுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது. தேவைப்படும் இடத்தில் போர் விமானங்களை கொண்டு சென்று நிறுத்துவோம்” எனவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.