;
Athirady Tamil News

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு ; வரி நிவாரணம் வழங்கத் திட்டம்

0

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடி சாதகமான தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும், உழைக்கும்போது செலுத்தும் வரி (PAYE) தொடர்பில் மேலதிக நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

சமூகக் குரலாக ஒலித்த இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை
இன்ஸ்டாவில் சமூகக் குரலாக ஒலித்த இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை
கொழும்பில் சனிக்கிழமை (7) நடைபெற்ற தொழிற்சங்க தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரத்திற்கு தனியார் துறையே மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

எனவே, அத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பொருளாதார நலன்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வணிகச் சங்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், தனியார் துறை ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுவோர் மீது விதிக்கப்படும் உழைக்கும்போது செலுத்தும் வரி தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள உழைக்கும்போது செலுத்தும் வரி வரம்பு முன்னர் 100,000 ரூபாவிலிருந்து 150,000 ரூபாவாக உயர்த்தப்பட்டதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக மேலதிக வரி நிவாரணங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுத்துறை, அரை அரசுத்துறை, பெருந்தோட்டத்துறை மற்றும் தனியார் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அவர், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மக்களினதும் நாட்டின் பொருளாதாரத்தினதும் நலன்களை மையப்படுத்தியே 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.