;
Athirady Tamil News

நைஜீரியாவில் ஒரே நாளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கடத்தல்: பயங்கரவாத குழு அட்டூழியம்

0

மேற்கு ஆப்பரிக்க நாடான நைஜீரியாவில், போகோ ஹராம், ஐ.எஸ். உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் சமீபகாலமாக இரு சக்கர வாகனங்களில் சென்று கிராமங்களை சூறையாடுவதும், பள்ளி குழந்தைகள், பெண்களை கடத்துவதும் அதிகரித்துள்ளது.

சில தினங்களுக்கு முன் நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் கொண்டுகா, மார்டே, ஜகானா, மைனோக் உள்ளிட்ட பல கிராமங்களில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தி உள்ளன.

இந்தநிலையில் அதே மாகாணத்தில் நாகோஷே என்ற ஊரில் புகுந்து பயங்கரவாத குழுக்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளன. கிராமத்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்டோரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போக்கோ ஹராம் பயங்கரவாதிகளின் 3 தளபதிகள் அரசுப் படைகளால் கொல்லப்பட்டனர்.இதனால், பழிதீர்க்கும் நடவடிக்கையாக அப்பகுதிவாசிகள் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக நைஜீரியாவில் போக்கோ ஹராம் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் மோதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.