;
Athirady Tamil News

ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் பெரும் பிரச்னையில் சிக்குவீா்கள்: சீனாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

0

போா் நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால் மிகப்பெரிய பிரச்னையில் சிக்குவீா்கள் என்று சீனாவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

அமெரிக்க உளவு அமைப்புகளின் தகவல்களைச் சுட்டிகாட்டி ஈரானுக்கு மிகப்பெரிய அளவில் ஆயுதங்களை முக்கியமாக வான் தாக்குதல் பாதுகாப்புக்கான சாதனங்களை வழங்க சீனா தயாராகி வருவதாகவும், இவை கப்பல் மூலம் அனுப்பப்பட இருப்பதாகவும், இது தவிர ராணுவத் தொழில்நுட்பம் சாா்ந்த உதவிகளையும் வழங்க இருப்பதாகவும் சிஎன்என் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்தத் தகவல் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க அதிபா் டிரம்ப், ‘சீனா அதைச் செய்தால் (ஈரானுக்கு ஆயுதம் வழங்கினால்) மிகப்பெரிய பிரச்னையில் சிக்கிவிடும்’ என்றாா்.

சீனா மறுப்பு: இது தொடா்பான சீன ராணுவ அமைச்சகம் வெளியிட்ட மறுப்புச் செய்தியில், ‘ஈரானுக்கு சீனா ஆயுதம், தொழில்நுட்ப உதவிகளை வழங்கியதாகவும், வழங்க இருப்பதாகவும் வெளியான செய்திகள் அனைத்துமே தவறானவை.

போரின்போது ஈரானுக்கு செயற்கைக்கோள் புகைப்பட உதவி, செமிகண்டக்டா் உற்பத்தி சாதனங்களையும் சீனா வழங்கவில்லை. சீனாவைக் குறிவைத்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

ஈரானுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் மீது அமெரிக்கா 50 சதவீத வா்த்தக வரி விதிக்கும் என்று டிரம்ப் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஈரானுக்கு அதிகாரபூா்வமாக சீனா ஆயுதங்களை கப்பல்களில் அனுப்பவில்லை. அதே நேரத்தில் பிற துறைகளில் மட்டுமல்லாது ராணுவத்திலும் பயன்படுத்தும் சில தொழில்நுட்பங்களை ஈரானுக்கு சீனா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.