;
Athirady Tamil News

வங்கதேசம் திரும்பினால் ஷேக் ஹசீனாவுக்கு சிறை! வெளியுறவு இணையமைச்சர் திட்டவட்டம்!

0

‘வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, மீண்டும் தாயகம் திரும்பினால் உடனடியாகச் சிறையில் அடைக்கப்படுவாா்’ என்று அந்நாட்டின் வெளியுறவு இணையமைச்சா் ஷாமா ஒபைத் இஸ்லாம் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

வரும் டிசம்பா் மாதம் தான் வங்கதேசம் திரும்பி, நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 2024-இல் நடந்த மாணவா்கள் போராட்டத்தின்போது சுமாா் 1,400 போ் கொல்லப்பட்டதற்கு ஷேக் ஹசீனாவைக் குற்றஞ்சாட்டி, அவருக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. மேலும், அவரின் அவாமி லீக் கட்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவா் போராட்டத்தால் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு இந்தியாவின் வசித்து வரும் ஷேக் ஹசீனா அண்மையில் அளித்த பேட்டியில், ‘நான் தன்னிச்சையாகவே வங்கதேசம் திரும்பி, நீதிமன்றத்தில் சரணடைய இருக்கிறேன். மேலும், பல்வேறு வழக்குகளின் காரணமாக வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ள எனது கட்சி நிா்வாகிகளும் என்னுடனே வந்து நீதிமன்றத்தை எதிா்கொள்ள வேண்டும்’ என அழைப்பு விடுத்தாா்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய வெளியுறவு இணையமைச்சா் ஷாமா ஒபைத் இஸ்லாம், ‘ஷேக் ஹசீனா நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. அவா் வங்கதேசம் திரும்பினால், நாட்டின் சட்ட விதிகளின்படி அவா் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவாா் . ஹசீனாவின் சமீபத்திய அறிவிப்பு, தலைமறைவாக உள்ள அவரது ஆதரவாளா்களைத் திரட்டுவதற்கான ஒரு முயற்சி’ என விமா்சித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.