;
Athirady Tamil News

‘ஹார்முஸ் ஜலசந்தியை காப்பாற்றியது அமெரிக்காதான்; அதற்கான பலன்கள் எங்களுக்கு வேண்டும்’ – டிரம்ப்

0

வாஷிங்டன்,

ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, சுமார் 3 மாதங்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. உலக எண்ணெய் வர்த்தகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகநாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

பல நாடுகளில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பின்னர் அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்ட நிலையில், ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் மீண்டும் அதிகரித்தது. ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் செல்லும் கப்பல்களை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்தது.

அதே சமயம், ஈரானின் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், “ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு முன்பிருந்த சூழல் இன்னும் திரும்பவில்லை. இந்த ஜலசந்தி வழியே செல்லக்கூடிய அனைத்து கப்பல்களும், ஈரான் அறிவித்த கடல் வழியிலேயே பயணிக்க வேண்டும். அப்படி இல்லையெனில், அந்த கப்பல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது” என்று தெரிவித்தது.

இதனால், ஆத்திரமுற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில், துருக்கியின் அங்காரா நகரில் நடந்த நேட்டோ உச்சி நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, ஈரானுடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது என திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஹார்முஸ் ஜலசந்தியின் முழு கட்டுப்பாட்டை நாங்கள் ஏற்க உள்ளோம். ஈரானிடம் எதுவும் இல்லை. ஈரானிடமிருந்து எழுந்த அச்சுறுத்தலை அமெரிக்கா 47 ஆண்டுகளுக்கு முன்பே கையாண்டிருக்க வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அநேகமாக அதை நாங்களே நிர்வகிப்போம். அந்த ஜலசந்திக்கு நாங்கள் பாதுகாவலராகத் திகழ்வோம். அமெரிக்காவை ஹார்முஸ் ஜலசந்தியின் காவல் தேவதை என்று கூட அழைக்கலாம். ஹார்முஸ் ஜலசந்தியை காப்பாற்றியது அமெரிக்காதான். அதற்கான பலன்கள் எங்களுக்கு வேண்டும்” என்று தெரிவித்தார்.

டிரம்ப் தனது கருத்தை தெரிவித்த நிலையில், மறுபுறம் ஈரான் இதற்கு பதிலடியாக மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஈரானின் பெர்சிய வளைகுடா நீரிணை ஆணையம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க படைகளின் அத்துமீறிய செயல்பாடுகள் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்வது தற்போது சாத்தியமற்றது. நிலைத்தன்மையும் அமைதியும் திரும்பியவுடன், அனைத்து விண்ணப்பங்களும் திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படி பரிசீலிக்கப்பட்டு, அனுமதி வழங்கும் நடைமுறை மீண்டும் தொடங்கப்படும். பயண அனுமதியைப் பெறுவதற்கான ஒரே வழி எங்கள் இணையதளம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.