உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து கல்முனையில் அஞ்சலி
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் 200ற்கும் மேற்பட்ட உயிர்களை பலிக் கொண்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன.
இதனை முன்னிட்டு குறித்த உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கான அஞ்சலி நினைவு நிகழ்வு நேற்று (21) மாலை கல்முனை பகுதியில் இடம்பெற்றது.
மேலும் குறித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவேந்தல் நிகழ்வு 07ஆண்டுகள் நிறைவினையொட்டி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன.இதன் போது ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்த சிறுவர்கள் நினைவு கூரப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.இங்கு இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் (Sri Lanka Easter bombings) 2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறிஸ்தவக் தேவாலயங்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன. இத்தாக்குதல்கள் தொடர்பாக பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
இத்தாக்குதல் நடைபெற்று சில தினங்களின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் ஒழிந்திருந்த தீவிரவாத குழுவை பற்றிய தகவல்களை அப்பிரதேச மக்கள் பாதுகாப்பு படைக்கு வழங்கி நாட்டில் மற்றுமொரு தீவிரிவாத செயல் நடைபெறாமல் தடுத்திருந்தனர். அப்போது இலங்கை பாதுகாப்பு படைக்கும் தீவிரவாத கும்பலுக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் சாய்ந்தமருதை சேர்ந்த அப்பாவி இளம் பெண்ணொருவரும் பலியாகியிருந்தமை குறிப்பிடதக்கது
