தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்வு
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தில் (2024/2025) புதிய கல்வியாண்டு மாணவர்களை வரவேற்கும் நோக்கில் சேர்க்கைக்கான துவக்க வழிகாட்டல் நிகழ்வு (Orientation Program) Gபுதன்கிழமை(22) ஒலுவில் வளாகத்தில் அமைந்துள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைடீன் அவர்கள் சிறப்பு உரையொன்றை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில், உயர்கல்வியின் முக்கியத்துவம், இன்றைய உலகில் திறன்கள் மற்றும் புத்தாக்க சிந்தனையின் அவசியம், மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அவற்றை சமாளிக்கும் முறைகள் குறித்து ஊக்கமூட்டும் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இன்றைய நாள் மாணவர்களுக்கு மட்டுமல்ல, பல்கலைக்கழகத்திற்கும் முக்கியமானதெனக் குறிப்பிட்டார். ஒவ்வொரு புதிய மாணவரின் வருகையும் புதிய நம்பிக்கைகள் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் வலியுறுத்தினார்.
மாணவர்களை நோக்கி உரையாற்றிய அவர், பல்கலைக்கழக வாழ்க்கை என்பது வெறும் விரிவுரைகளும் பரீட்சைகளும் மட்டுமல்ல, அது தங்களை கண்டறியும் ஒரு வாழ்க்கைப் பயணம் எனக் கூறினார்.
அதேவேளை, பகிடிவதை (ragging) குறித்து “Zero Tolerance Policy” கடைப்பிடிக்கப்படுவதாகக் குறிப்பிட்டு, எந்த வடிவிலான துன்புறுத்தலையும் பல்கலைக்கழகம் கடுமையாக எதிர்க்கும் எனத் தெளிவுபடுத்தினார். பகிடிவதை நட்பை வளர்க்காது; அது அச்சம், மன அழுத்தம் மற்றும் தீங்குகளை மட்டுமே உருவாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாணவர்கள் தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தும் போது பொறுப்புடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், ஏதேனும் தவறுகள் நிகழ்ந்தால் அதனை வெளிப்படுத்த தயங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இதுவரை 16,000-க்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதாகவும், அதில் கலை மற்றும் கலாச்சார பீடம் மட்டும் கிட்டத்தட்ட 6900-க்கும் அதிகமான பட்டதாரிகளை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த வளர்ந்து வரும் கல்வி சமூகத்தில் புதிய மாணவர்களும் இணைவதாக அவர் பெருமையுடன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வாழ்க்கையின் சவால்கள் – நேர முகாமைத்துவம், சுய தீர்மானம், நிச்சயமற்ற சூழ்நிலைகள் ஆகியவை – மாணவர்களை வடிவமைக்கும் முக்கிய அம்சங்களாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேநேரத்தில், மாணவர்கள் பல்வேறு சமூக, அரசியல் மற்றும் கல்விசார் பாதைகளை சந்திப்பார்கள் என்றும், எந்த பாதையைத் தேர்ந்தெடுத்தாலும் கல்வியே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
விடுதிப் பற்றாக்குறையின் காரணமாக, முதலாம் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டுமே விடுதி வசதி வழங்கப்படுவதாகவும், சில கல்விசார் நடவடிக்கைகள் இணையவழியில் நடைபெறக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கான ஒத்துழைப்பை மாணவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
முடிவில், “நீங்கள் இன்றிலிருந்து எடுக்கும் முடிவுகளே உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்” எனக் கூறிய அவர், மாணவர்கள் விவேகத்துடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
“புதிய தொடக்கங்கள் மற்றும் முடிவில்லா வாய்ப்புகள்” (New Beginnings and Endless Opportunities) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மாணவர்களின் பல்கலைக்கழக வாழ்க்கையின் முதல் கட்டத்தை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் அமைத்திடும் வகையில் அமைந்திருந்தது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பெற்றோர்கள் சூழ அலையாய் திரண்டிருந்த புதிய மாணவர்களுடன் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளான பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.எல்.ஏ. ஹலீம், அஷ்- ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ், ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர் ஆகியோருடன் பதிவாளர் எம்.ஐ. நௌபர், நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக பொறியியலாளர், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் திரண்டிருந்தனர்.
நிகழ்வில் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி ஏ.எவ்.எம். அஷ்ரப் வரவேற்புரை நிகழ்த்தினார். இவ்வரவேற்புரையில் புதிய மாணவர்களை உளமாற வரவேற்கும் செய்தியுடன், பல்கலைக்கழக வாழ்க்கையின் அடிப்படை ஒழுங்குகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து விளக்கமளித்தார்.
இப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் அறிவைப் பெறுவதோடு மட்டுமல்லாது, திறன்கள், மதிப்புகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியையும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர் எனக் குறிப்பிட்டார். மேலும், கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்துமாறும், எதிர்கால சவால்களை தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் எதிர்கொள்ளுமாறும் மாணவர்களை ஊக்குவித்தார். வளமான கற்கைச் சூழல் மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்களின் வழிகாட்டலுடன், மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை தாங்களே வடிவமைக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, கலை மற்றும் கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்கள் பீடத்தின் அறிமுக உரையை வழங்கினார். தனது உரையில், தென் கிழக்கு பல்கலைக்கழகம் இயற்கை வளமிக்க சூழலில் அமைந்துள்ளதுடன், கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கான சிறந்த தளமாக திகழ்கின்றது எனக் குறிப்பிட்டார்.
மேலும், கலை மற்றும் கலாசார பீடம் தனிநபர், சமூக மற்றும் தேசிய தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உயர்தர கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் படைப்பாற்றல் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது என்றும் தெரிவித்தார். மாணவர்களின் பகுப்பாய்வு திறன், தலைமைத்துவம், நெறிமுறை மற்றும் ஆராய்ச்சி திறன்களை மேம்படுத்தும் சூழலை உருவாக்குவதே பீடத்தின் பிரதான குறிக்கோள் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது சுமார் 1400 மாணவர்கள் கல்வி பயிலும் இந்தப் பீடத்தில், இவ்வாண்டு 420 புதிய மாணவர்கள் இணைந்துள்ளதாகவும், அதில் பெரும்பான்மையாக பெண் மாணவர்கள் இருப்பது சமகால சமூக மாற்றங்களை பிரதிபலிக்கின்ற முக்கிய அம்சமாகும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இலங்கையின் கலை மற்றும் சமூக விஞ்ஞானக் கல்வி துறையில் முன்னணி இடம் வகிக்கும் பீடங்களில் ஒன்றாக இது திகழ்கின்றது என்றும், உயர்ந்த Z-Score அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவது அதன் தரத்தை வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பீடத்தின் தனித்துவங்களை விளக்கிக்காட்டிய அவர், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT) துறை கலைப் பீடத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகும் என்றும், மாணவர்கள் நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப பல்துறை (multi-disciplinary) கல்வி முறையில் பயிற்றப்படுகின்றனர் என்றும் கூறினார்.
அத்துடன், உலக வங்கி நிதியுதவியுடன் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், தகவல் தொழில்நுட்ப வளங்கள் மற்றும் மாணவர் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். நூலக வசதிகள், மின்னூல்கள் (e-resources), ஆய்வு இதழ்கள் (journals) ஆகியவற்றின் வாயிலாக மாணவர்கள் விரிவான அறிவைப் பெறும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாணவர்கள் கல்வியுடன் மட்டுமல்லாமல் விளையாட்டு மற்றும் இணைச் செயல்பாடுகளிலும் முன்னேற வேண்டும் என்றும், சமீபத்தில் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களை எடுத்துக்காட்டாகக் கொண்டு முயற்சி மற்றும் ஒழுக்கம் வெற்றிக்கு வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் அரசியல் விஞ்ஞான பேராசிரியர் கலாநிதி எம்.ஏ.எம். பௌசர், பீடத்தின் கல்விசார் அணியினர் சார்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில் மாணவர்கள் கல்வி மற்றும் ஒழுக்கத்தை முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்களையும், பல்கலைக்கழக சூழலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய பொறுப்புகளையும் எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், பல்கலைக்கழக வாழ்க்கை என்பது வெறும் பாடப்பயிற்சியல்ல, முழுமையான வாழ்க்கை அனுபவமாகும் என வலியுறுத்தினார். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் உயர்கல்விக்குள் நுழைந்துள்ள மாணவர்கள், தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டு நல்ல பிரஜைகளாக உருவாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், கலை மற்றும் கலாசாரம் மனிதனின் உணர்வுகளையும் சமூகத்தின் அடையாளத்தையும் பாதுகாக்கும் முக்கிய துறைகளாகும் என்பதையும் சுட்டிக்காட்டிய அவர், விமர்சனங்களைக் கடந்து இத்துறையின் மதிப்பை உணர்ந்து பயன் பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். பல்வகை சமூக சூழலில் கல்வி கற்றுக் கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்தி சிந்தனை, ஆராய்ச்சி மற்றும் நல்ல பண்புகளுடன் வளர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாச்சார பீடத்தின் புதிய மாணவர்களுக்கான நிகழ்வில் உரையாற்றிய பேராசிரியர் கலாநிதி கே. கணேசராஜா, மாணவர்கள் தங்கள் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற பல்கலைக்கழகம் வழங்கும் வளங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
தாம் புதுமுக மாணவராக இருந்த கால அனுபவங்களை பகிர்ந்த அவர், மொழி மற்றும் சூழல் மாற்றங்கள் போன்ற சவால்களை கடந்து முன்னேற வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மாணவர்களின் வெற்றியே பெற்றோர், சமூகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் பெருமையாக மாறும் எனக் குறிப்பிட்ட அவர், formal கல்வி முறையின் அடிப்படையில் உருவாகும் திறன்களை நடைமுறை உலகிற்கேற்ற வகையில் மேம்படுத்த வேண்டும் என்றார்.
சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் வெற்றிக்கான முக்கிய அம்சம் எனவும், பல்கலைக்கழகத்தில் உள்ள கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய பட்டதாரிகளாக உருவாக வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, துறைத் தலைவர்களின் சார்பில் கலாநிதி எம். றிஸ்வான் உரையாற்றினார். இவ்வுரையில், ஒவ்வொரு துறையின் செயற்பாடுகள், பாடத்திட்ட அமைப்புகள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கல்விசார் வாய்ப்புகள் குறித்து தெளிவுபடுத்தினார்.
மேலும், மாணவர் ஒன்றியத்தின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றுப் பின்னணியையும் விளக்கினார். மாணவர்களின் நலன் மற்றும் பீடத்தின் முன்னேற்றமே அதன் அடிப்படை நோக்கம் எனத் தெரிவித்த அவர், குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், இலவச Wi-Fi, மானிய உணவு வசதி, சிறப்பான நூலகம் போன்ற வசதிகள் மூலம் இப்பீடம் தனித்துவமிக்கதாக திகழ்வதை எடுத்துரைத்தார்.
மேலும், கல்வியுடன் கலை மற்றும் சமூகச் செயல்பாடுகளிலும் முன்னிலை வகிக்கும் இப்பீடம், சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கும் சூழலை உருவாக்கியுள்ளது என்றும், ragging இல்லாத பாதுகாப்பான சூழல் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கலை மற்றும் கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதியும் மாணவர்களின் சார்பில் உரையாற்றினார். இவ்வுரையில், மாணவர் செயற்பாடுகள், சமூக உறவுகள் மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுக்க வேண்டிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வின் நிறைவாக, கலை மற்றும் கலாசார பீடத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஸ்ஹர் நன்றியுரையாற்றினார்.
இந்த வழிகாட்டல் நிகழ்வு, புதிய மாணவர்களுக்கு கல்வி பயணத்தின் துவக்கத்தை உறுதியானதாக்கி, எதிர்கால வெற்றிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது
மேலும், கல்வியுடன் கலை மற்றும் சமூகச் செயல்பாடுகளிலும் முன்னிலை வகிக்கும் இப்பீடம், சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வளர்க்கும் சூழலை உருவாக்கியுள்ளது என்றும், ragging இல்லாத பாதுகாப்பான சூழல் மாணவர்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கலை மற்றும் கலாசார பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதியும் மாணவர்களின் சார்பில் உரையாற்றினார்.
இவ்வுரையில், மாணவர் செயற்பாடுகள், சமூக உறவுகள் மற்றும் பல்கலைக்கழக வாழ்க்கையை சிறப்பாக முன்னெடுக்க வேண்டிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வின் நிறைவாக, கலை மற்றும் கலாசார பீடத்தின் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஸ்ஹர் நன்றியுரையாற்றினார்.
இந்த வழிகாட்டல் நிகழ்வு, புதிய மாணவர்களுக்கு கல்வி பயணத்தின் துவக்கத்தை உறுதியானதாக்கி, எதிர்கால வெற்றிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
