100 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து; இராண்டாக பிளப்பு!
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (25) லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த சாரதி மற்றும் உதவியாளர் லிந்துலை ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெல்லவாயாவிலிருந்து ஹட்டன் எபோட்ஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றிச் சென்ற ஒரு லொறி பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 100 அடி ஆழமுள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் விபத்து சம்பவம் குறித்து லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.