;
Athirady Tamil News

ஏவுகணைச் சோதனை ; வடகொரியாவால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

0

வடகொரியா தனது கிழக்குக் கடற்பகுதியை நோக்கிப் பல பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவிச் சோதனை செய்துள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இந்த ஆயுதச் சோதனைகள் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

வடகொரியாவின் புதிய ஏவுகணைச் சோதனை
தென்கொரியாவின் கூட்டுப் படைத் தளபதிகள் வெளியிட்ட தகவலின்படி, வடகொரியத் தலைநகர் பியாங்யாங்கைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 9.20 மணியளவில் ஏவுகணைகள் செலுத்தப்பட்டுள்ளன.

குறைந்தது இரண்டு ஏவுகணைகள் கிழக்குக் கடற்பகுதியை நோக்கிச் செலுத்தப்பட்டதாகவும், அவற்றில் சில 900 கிலோமீற்றருக்கும் அதிகமான தூரம் பயணித்ததாகவும் ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே கடலில் விழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து ஐந்து நாட்கள் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டன.

இதற்கிடையில், தென்கொரியா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஆயுதத்தையும் சோதனை செய்திருந்தது. இந்தச் சூழலில் வடகொரியாவின் புதிய ஏவுகணைச் சோதனை இடம்பெற்றுள்ளது.

வடகொரியா தனது அணு ஆயுதத் திறனை வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து ஆயுதச் சோதனைகளை முன்னெடுத்து வருகிறது.

அதேவேளை, அமெரிக்கா மற்றும் தென்கொரியா முன்வைத்துள்ள இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளையும் வடகொரியா நிராகரித்து வருகிறது.

வடகொரியாவின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அதற்குப் பதிலாக அண்டை நாடுகள் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, கொரிய தீபகற்பத்தில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.