;
Athirady Tamil News

22 இளம்பிக்குகளின் போதைப்பொருள் கடத்தல் ; அதிர்ச்சியளிக்கும் பின்னணி ; இன்டர்போலிடம் கோரிக்கை

0

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கிலோ எடை கொண்ட போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 இளம்பிக்குகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில், இந்த போதைப்பொருள் வலையமைப்பின் பின்னணியில் பிரதான சூத்திரதாரிகளாக இரு தேரர்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தம்மரத்ன மற்றும் புண்ணியரத்ன ஆகிய பெயர்களால் அறியப்படும் இந்த 2 தேரர்களும் தாய்லாந்தில் தங்கியிருந்தவாறு இந்த போதைப்பொருள் வலையமைப்பை முன்னெடுத்து வந்துள்ளமை இதுவரையிலான விசாரணையில் தெரியவந்துள்ளதாக போதைப்பொருள் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகள்
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவியோடு இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸாரை அணுகி குறித்த இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன.

இந்த நிலையில், தாய்லாந்திலிருந்து குஷ் மற்றும் ஹெஷ் ஆகிய போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 தேரர்களினதும் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அவர்கள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது, அதில் 19 தேரர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைவிட, இந்த 22 பேருக்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் போதைப்பொருள் தொடர்பிலான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த மார்ச் மாதம் இந்த போதைப்பொருட்களைக் கடத்தி வந்ததாகக் கூறப்படும் 12 தேரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதுவரையிலான விசாரணைகளில், 22 இளம் தேரர்களுக்கு மேலதிகமாக குறித்த தேரர்களை தாய்லாந்துக்கு அனுப்புவதுக்கு அனைத்து ஒருங்கிணைப்பு வசதிகளையும் முன்னெடுத்ததாகக் கூறப்படும் அங்குணகொலபெலஸ்ஸ அமிதானந்த தேரர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இதனைவிட சந்திரகுமார் எனும் மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பிரகாரம், தாய்லாந்தில் தங்கியுள்ள தம்மரத்ன மற்றும் புண்ணியரத்ன ஆகிய பெயர்களால் அறியப்படும் இரு தேரர்களும் அமிதானந்த எனும் தேரரோடு தொடர்புபட்டு இந்த வலையமைப்பை முன்னெடுத்துச் செல்வதும், அமிதானந்த தேரர் கடத்தி வரப்படும் போதைப்பொருட்களை சந்திரகுமார் எனும் நபருக்குக் கொடுக்கின்றமையும் தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் பிரபல வர்த்தகர்கள் பலருக்கு இந்தப் போதைப்பொருட்கள் கைமாற்றப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.தாய்லாந்து சென்ற தேரர்களுக்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் ஏனைய செலவுகள் தொடர்பாக அனுசரணை வழங்கியதாகக் கூறப்படும் பிரபல வர்த்தகர் ஒருவர் தொடர்பாகவும் விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காலியைச் சேர்ந்த குறித்த வர்த்தகர் கொழும்பில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி குறித்த வர்த்தகரைக் கைது செய்வதற்கு தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.