;
Athirady Tamil News

பதுளை போதனா வைத்தியசாலை மருத்துவர் மரணம் ; பொலிஸார் சந்தேகம்

0

பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

காணாமல் போயிருந்த பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியர் பிரபாத் அநுராத தயாரத்னவின் சடலம் பொலிஸாரால் இன்று (24) முற்பகல் மீட்கப்பட்டது.

<strong>வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம்?</strong>
இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டைக்கு அருகிலுள்ள அடர்ந்த புதர் பகுதியில் வைத்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பதுளை போதனா வைத்தியசாலையின் மயக்கவியல் விசேட வைத்தியரான பிரபாத் அநுராத தயாரத்ன நேற்று (23) முற்பகலில் இருந்து காணாமல் போயுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன் பலனாக, வைத்தியரின் கார் பதுளை – மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து நேற்றிரவு (23) கண்டெடுக்கப்பட்டது.

இதற்கமைய, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அப்பகுதியில் கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்தனர்.

இதன்போது, காணாமல் போன வைத்தியரின் சடலம் அப்பகுதியிலுள்ள அடர்ந்த புதருக்குள் சுமார் 800 மீற்றர் உட்புறமாக அமைந்திருந்த பாறையொன்றின் மீது கிடந்த நிலையில் இன்று (24) காலை கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் இருந்து 3 வகையான மருந்துகளையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். இதற்கமைய, அந்த மாத்திரைகளை உட்கொண்டு வைத்தியர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், அவர் நீண்டகாலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளமையும் பொலிஸாரால் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.