வீடு திரும்பியவர்கள் வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட கண் மருந்துகளை வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப தொடர்ச்சியாகவும் முறையாகவும் பயன்படுத்துமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தேவையற்ற ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடித்தல், லேசர் ஒளிக்கீற்றுகளைப் பயன்படுத்துதல், யானைகளை அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் ஊடகங்கள் வாயிலாகவும் விடுக்கப்பட்டன.
எனினும் சில ஆலயங்கள் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு உரிய முறையில் செவிசாய்க்காமல், பொதுமக்களுக்கு சிரமத்தை யும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது கவலையளிக்கிறது.
எனவே, வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தினர், மதகுருமார்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டிய அனைத்து தரப்பினரும் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து, எதிர்காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சமூகப் பொறுப்புணர்வுடன் திருவிழா நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவுறுத்தியுள்ளார்.
சைவத் திருக்கோவில்கள் திருவிழாக்களில் வான வேடிக்கைகளையும் களியாட்டங்களையும் முற்றுமுழுதாக நிறுத்துங்கள் என சைவ ஆன்மீக தலைவர் தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ் மாவட்ட சைவத்திருக்கோவில் திருவிழா நிகழ்வின் அதீத வெளிச்சத்தை வெற்றுக்கண்ணால் பார்த்த பலர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்ட்டிருக்கின்றமை மிகுந்த துயரத்தைத் தோற்றுவித்தது.
அதே போல கடந்த மாதங்களில் சில ஆலய திருவிழாக்களில் மிகவும் விரும்பத்தகாத ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் சைவசமயி மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது
சைவ பரிபாலன சபை இந்து கலாச்சார திணைக்களம் என்பன சில ஒழுங்குவிதிகளை கட்டுப்பாடுகளை ஏற்கனவே திருக்கோவில்களிடம் வலியுறுத்தி உள்ளன அது வரவேற்கத்தக்கது.
ஆதலினால் ஆலய அறங்காவலர்களே எக்காரணம் கொண்டும் ஆலய திருவிழாக்களில் இவ்வாறான எந்த களியாட்டங்களிற்கோ அதிக வெளிச்சம் பாய்ச்சல் நிகழ்வுகளிற்கோ ஒலி எழுப்புதலுக்கோ இடம் அளிக்காதீர்கள்
இந்த விடயத்தை மிகவும் சிரத்தை எடுத்து தலைமேற்கொண்டு கோவிலை தழுவிய குடிகள் குடிகளை தழுவிய கோவில் என்பதற்கு உயிர் கொடுக்குமாறு அனைத்து ஆலயம் சார்ந்த சைவ பெருமக்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்காக கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்பதுடன் , உள்ளூராட்சி சபைகள் ஊடாக துணை விதிகள் உருவாக்கப்பட்டு , இவற்றை தடுப்பதற்கான சட்டங்களையும் அமுல் படுத்த வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக உள்ளது.
