முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது – மம்தா பானர்ஜி சொல்லும் காரணம் என்ன?
மேற்கு வங்கத்தில் தோற்ற பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஆட்சியை கைப்பற்றிய பாஜக
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
இதன் மூலம், 2011 ஆம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் நடைபெற்று வந்த திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
15 ஆண்டுகளாக முதல்வராக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, போட்டியிட்ட பபானிபூர் தொகுதியில் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியை தழுவியுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதால் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா செய்ய மம்தா மறுப்பு
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் தோல்வி அடையவில்லை. எனவே நான் ராஜ்பவனுக்கு செல்லப்போவது இல்லை. நான் எனது ராஜினாமா கடிதத்தை சமர்பிக்க மாட்டேன்.
நான் தோற்றிருந்தால், ராஜினாமா செய்திருப்பேன். ஆனால், அழுத்தத்தின் காரணமாக நான் பதவி விலகுவேன் என்று யாராவது நினைத்தால், அது நடக்காது. நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை.தார்மீக ரீதியாக, நாங்கள் தேர்தலில் வென்றோம்.
இந்த தேர்தலில் 100 இடங்கள் திருடப்பட்டுள்ளது. இப்படித்தான் அவர்கள் மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார் மற்றும் இப்போது வங்காளத்தில் தேர்தல்களைத் திருடினார்கள்.
திரிணால் காங்கிரஸின் உண்மையான எதிரி பாஜக அல்ல, தேர்தல் ஆணையமே. நீதித்துறை இல்லாதபோதும், தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக இருக்கும்போதும், அரசு ஒற்றைக் கட்சி ஆட்சியை விரும்பும்போதும், உலகிற்கு ஒரு தவறான செய்தி செல்கிறது.
என் வயிற்றிலும் முதுகிலும் உதைக்கப்பட்டேன். சிசிடிவி அணைக்கப்பட்டிருந்தது. நான் வாக்கு எண்ணும் நிலையத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டேன். ஒரு பெண்ணாக என்னிடம் தவறாக நடந்து கொள்ளப்பட்டது. மத்தியில் இருந்த முந்தைய பாஜக அரசுகளை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோன்று நடந்ததில்லை” என குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி ஆதரவு
இதனையடுத்து,மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸில் உள்ள சிலரும், மற்றவர்களும் திரிணாமுல் காங்கிரஸின் தோல்வியைக் கண்டு இறுமாப்பு கொள்கிறார்கள். அவர்கள் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அசாம் மற்றும் வங்காளத்தின் மக்கள் ஆணையைத் திருடியது, இந்திய ஜனநாயகத்தை அழிக்கும் பாஜகவின் நோக்கத்தில் ஒரு பெரிய முன்னேற்றப் படியாகும். சிறு அரசியலை ஒதுக்கி வையுங்கள். இது ஒரு கட்சியைப் பற்றியோ அல்லது மற்றொரு கட்சியைப் பற்றியோ அல்ல. இது இந்தியாவைப் பற்றியது.
தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் பாஜகவால் தேர்தல் திருடப்பட்டதற்கான தெளிவான உதாரணங்கள் அசாம் மற்றும் வங்காளம் ஆகும். நாங்கள் மம்தா ஜியுடன் உடன்படுகிறோம். வங்காளத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்கள் திருடப்பட்டன” என தெரிவித்துள்ளார்.