;
Athirady Tamil News

கச்சத்தீவை கேட்காதீர்!! திருவிழாவுக்கு மட்டும் வந்து செல்லுங்கள்.. விஜய்க்கு நாமல் அழைப்பு

0

கச்சத்தீவை கேட்க வேண்டாம், அது எமது சொத்து. வேண்டுமென்றால், கச்சத்தீவு திருவிழாவிற்கு முறையான வீசா அனுமதிப் பெற்று ஒரு சுற்றுலாப் பயணியாக வந்து செல்லலாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம்(06/05/2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களின் நம்பிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது தென்னிந்தியாவில், ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து குறுகிய காலத்திற்குள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். அவர் மீது இளைஞர்கள் உள்ளிட்ட பெருமளவான மக்கள் பாரிய நம்பிக்கையைக் கொண்டுள்ளனர்.

எனினும், அரசியல் என்பது சினிமா போன்றது அல்லது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். திரைப்படத்தில் நடிக்கும் போது காட்சிகள் மிக இலகுவானவை. ஆனால் அரசியல் என்பது முற்றிலும் யதார்த்தமானது. மக்கள் மத்தியில் அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தற்போது அவர் முன்னுள்ள முக்கிய பணியாகும்.

விஜய் தனது வாக்குறுதிகளைத் தவறவிட்டால், இலங்கை மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது ஏமாற்றமடைந்துள்ளதைப் போன்ற நிலையை சந்திக்க நேரிடும்.

மேலும், விஜய், கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் தேர்தல் மேடைகளில் அதிகளவான கருத்துக்களை முன்வைத்திருந்தார். கச்சத்தீவு என்பதை இலங்கையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி. அதனை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது.

வேண்டுமென்றால், அடுத்த வருடம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில், முறையான வீசா அனுமதியைப் பெற்று சுற்றுலாப் பயணியாக கலந்து கொள்ள முடியும். கச்சத்தீவுக்கு வந்து அவர் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்லுமாறு நாம் அவருக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

தமிழக அரசு என்பது இந்தியாவின் ஒரு மாநில அரசு மாத்திரமே. ஒரு மாநில அரசால் இலங்கையின் தீர்மானங்களிலோ அல்லது அதன் நிலப்பரப்பு விவகாரங்களிலோ நேரடித் தாக்கம் செலுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.