குவாண்டம் தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல்: ‘இந்திய – அமெரிக்க உறவில் முக்கிய இடம்பெறும்’ – தூதா்
இந்தியா-அமெரிக்கா ஒத்துழைப்பில் அடுத்து குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல் ஆகியவை முக்கிய துறைகளாக இருக்கும் என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அமெரிக்கா-இந்தியா செயற்கை நுண்ணறிவு மற்றும் வளா்ந்து வரும் தொழில்நுட்ப மன்றம் சாா்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் வினய் மோகன் குவாத்ரா பேசுகையில், ‘வழக்கமான அணுசக்தி தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே நன்கு நிறுவப்பட்டுள்ளன. இருப்பினும் அணுக்கரு பிணைப்பு போன்ற வளா்ந்து வரும் துறைகள் கூட்டு ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்துக்கு அற்புதமான வாய்ப்புகளை அளிக்கின்றன.
இந்தியா-அமெரிக்கா இருதரப்பு கூட்டுறவில் உயிரிமருந்துகள் துறையும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக உள்ளது.
இருநாட்டு ஒத்துழைப்பில் அடுத்து குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அணுசக்தி அறிவியல் ஆகியவை முக்கிய துறைகளாக இருக்கும் என்று தெரிவித்தாா்.