;
Athirady Tamil News

அதிக ஒலியுடன் ஒலிபெருக்கி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அதிரடி உத்தரவு!

0
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்! 
யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் நேற்றைய தினம் (19.05.2026)  மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், சுற்றாடல் குழு கூட்டம் வினைத்திறனாக நடைபெறுமாக இருந்தால் மாவட்டத்தில் இருக்கின்ற பல சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளை தீர்வுக்கு கொண்டு வர முடியும் என்றும், இக் கூட்டத்தை வினைத்திறனாகக் கொண்டு நடாத்துகின்ற பொறுப்பு கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொருவரையும் சார்ந்து நிற்கும் என்றும் தெரிவித்தார். மேலும், சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விடயங்களை முழுமையாக கவனம் எடுத்து ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக நடவடிக்கை எடுப்போமாக இருந்தால் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பெரும் பங்காக இருக்கும் எனவும் தெரிவித்ததோடு மாநகர சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை கெளரவ முதல்வர் மற்றும் கௌரவ தவிசாளர்கள் பொறுப்பேற்றதன் பின்னர் கழிவு முகாமைத்துவத்தை அவர்களின் கொள்ளளவுக்கு ஏற்ற வகையில் சிறப்பாக மேற்கொள்வதாக கூறி அவர்களுக்கு நன்றிகளை அரசாங்க அதிபர் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அரச நிறுவனங்கள் கழிவு முகாமைத்துவத்தை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும்,
மாவட்ட மட்டத்தில் இருக்கும் உள்ளூர் அதிகார சபைகள் கழிவு முகாமைத்துவம் மட்டுமின்றி சுற்றாடல் சார்ந்த, சூழல் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும், அடுத்த சுற்றாடல் குழு கூட்டத்தினை ஜூலை இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அக் கூட்டத்தில் ஆக்கபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஏதுவாக, பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி அதிகார சபை  தவிசாளர்கள் ஆகியோர் தங்களுடைய சுற்றாடல் குழு கூட்ட முன்மொழிவுகளை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் பிரதானமாக கலந்துரையாடப்பட்டன.
வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பாவிக்கப்படும் ஒலிபெருக்கிகள் அனுமதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையும் மீறி பொதுமக்களுக்கு குறிப்பாக மாணவர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பெரும் ஒலி எழுப்பப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அதிக ஒலி எழுப்பப்பட்டால் கிராம அலுவலர் ஊடாக அதனை கட்டுப்படுத்தும் பொறுப்பினை பிரதேச செயலாளர்கள் ஏற்க்க வேண்டும் எனவும், மீறுவோர்கள் மீது கிராம அலுவலர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியதுடன், வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும், பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் மூலம் தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைகளை கட்டுப்படுத்தல், குப்பைகளை எரிவூட்டுவதனால் வளி மாசடைதல் மற்றும் வாணவேடிக்கைகளைல் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், பொது மக்களுக்கு உரிய விழிப்புணர்வுகளை வழங்க நடவடிக்கைகள் எடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  பா.ஜெயகரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.எஸ்.சிவகுமாரன், உதவி மாவட்டச் செயலாளர்  உ.தா்சினி, பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை வைத்திய அதிகாரி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உதவி ஆணையாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.