யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கருணநாதன் இளங்குமரன் தலைமையில் இன்றைய தினம் (22.05.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய கருணநாதன் இளங்குமரன், போக்குவரத்துத் துறை மிகவும் இன்றி அமையாததுடன் இங்கு நேரமுகாமைத்தவம் முக்கியமானது எனவும், போக்குவரத்தில் தடங்கல்கள் காலதாமதங்கள் ஏற்பட்டால் திட்டமிடப்பட்டவை அனைத்தும் பின்னோக்கி நகரும் எனவும், இதனால் சீரான போக்குவரத்திற்கு வீதி அபிவிருத்தி முக்கியமானது எனத் தெரிவித்தார். மேலும், கடந்த வருடம் கிராமிய வீதிகளுக்கான 1000 மில்லியன் ரூபா மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீதிகளுக்கான 2500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட வீதி அபிவிருத்தித் நிகழ்ச்சித் திட்டங்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசுசரிய – பாடசாலை பேருந்துச் சேவை, கெமி செரிய – கிராமிய இணைப்பு பேருந்து சேவை, நிசி செரிய – பின்னிரவு பேருந்து சேவை மற்றும் கடல்வழிப் போக்குவரத்து ஆகியன தொடர்பாக விரிவாக ஆராய வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், ஒரு அபிவிருத்தி வேலையினை ஆரம்பிக்கும் போது நிதி ஒதுக்கீட்டுக்கு அமைய, பகுதியளவில் மேற்கொள்ளாமல் முழுமையாக நிறைவேற்றி முடிப்பதே ஆரோக்கியமானது எனவும், யாழ்ப்பாண மாவட்டமானது அபிவிருத்தி வேலைத் திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மையாக விளங்குகிறது எனவும், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட வேலைத் திட்டங்களை ஒன்றிணைந்து மாவட்டத்தின் அபிவிருத்திக்கு காத்தரமான பங்களிப்புக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் வீதி அபிவிருத்தி தொடர்பாகவும், 2027ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள கிராமிய வீதி அபிவிருத்தி திட்டம், கிராமிய பாலங்கள் அபிவிருத்தித் திட்டங்கள், கிராமிய வீதிகளில் காணப்படும் பாதுகாப்பற்ற பிரதேசங்களை சீர்ப்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு – அனுமதிகளும் வழங்கப்பட்டன மேலும், குமுதினிப் படகு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி முதல்வர் இ.தயாளன், மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிறிவாகீசன், மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவகுமாரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், துறைசார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றினார்கள்.
