;
Athirady Tamil News

வளைகுடாவில் அமைதி திரும்புமா? போர் நிறுத்தம் குறித்து டிரம்ப் முக்கிய ஆலோசனை

0

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. ஆனால் ஹார்முஸ் நீரிணை மூடல் மற்றும் ஈரான் கடற்பகுதி முற்றுகை உள்ளிட்ட காரணங்களால் முழுமையான அமைதி திரும்பவில்லை. போர் நிறுத்தத்தை மீறி இரு தரப்பும் அவ்வப்போது தாக்குதலும் நடத்தி வருகின்றன. இதனால் வளைகுடா பகுதி முழுவதும் போர் பதற்றம் நீடித்து வருகிறது.இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக தற்காலிக ஒப்பந்தம் நேற்று முன்தினம் எட்டப்பட்டது. பின்னர் இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இறுதி முடிவு எடுப்பதற்காக டிரம்ப் நேற்று ஆலோசனை நடத்தினார்.

ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்வது பற்றி வெள்ளை மாளிகையில் தனது ஆலோசகர்களுடன் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். முன்னதாக இந்த தற்காலிக ஒப்பந்தத்தில் சில அம்சங்கள் விவாதத்துக்குரியதாக இருப்பதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறியிருந்தார். எனவே இதற்கு டிரம்ப் ஒப்புதல் அளிப்பாரா? என்பதை கூற முடியாது என்றும் தெரிவித்தார்.இதற்கிடையே எந்தவித உத்தரவாதங்கள் அல்லது வார்த்தைகள் மீது ஈரான் நம்பிக்கை கொள்ளாது என்றும், செயல்களை மட்டுமே நம்பும் என்றும் அந்த நாட்டு சபாநாயகர் முகமது காலிபாப் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அமைதி திரும்புமா?
அதில் அவர், ‘நாங்கள் சலுகைகளை பேச்சுவார்த்தை மூலம் பெறவில்லை, ஏவுகணைகள் மூலமே பெறுகிறோம். பேச்சுவார்த்தைகளில் அதை அவர்களுக்கு புரியவைக்க மட்டுமே செய்கிறோம். எந்த ஒப்பந்தத்திலும் அது கையெழுத்து போட்ட மறுநாள் முதலே சிறந்த போருக்கு தயாராகி இருப்பவரே வெற்றியாளர்’ என குறிப்பிட்டு இருந்தார். ஈரான் சபாநாயகரின் இந்த பதிவு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் அமைதி திரும்புமா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.