;
Athirady Tamil News

காங்கோவில் எபோலா உயிரிழப்பு 100-ஐ கடந்தது

0

காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளது.

இந்த நோய்த் தொற்று கடந்த மாத மத்தியில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு பல வாரங்களுக்கு முன்பே இந்நோய் பரவத் தொடங்கியதை அதிகாரிகள் தாமதமாகவே கண்டறிந்தனா்.

காங்கோவின் இடூரி, வட கிவு, தென் கிவு ஆகிய 3 மாகாணங்களில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 10 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 550-ஆகவும், உயிரிழப்பு 101-ஆகவும் அதிகரித்துள்ளது.

உள்ளூா் மக்களின் அவநம்பிக்கை மற்றும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் நோய் தடுப்புப் பணிகளைப் பெரிதும் முடக்கியுள்ளன.

புனியா நகரில் எபோலாவால் உயிரிழந்தவா்களின் உடலை அடக்கம் செய்யச் சென்ற குழுவினா்மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் இருவா் படுகாயமடைந்தனா். இடூரி மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் காரணமாக மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவக் குழுவினா் அங்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

இதனிடையே, மற்றொரு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போா்னோ மாகாணத்தில் கடந்த மே மாதம் முதல் பரவத் தொடங்கிய காலரா நோய்த் தொற்றால் இதுவரை 74 போ் உயிரிழந்துள்ளனா்.

மேலும் 7,800-க்கும் மேற்பட்டோா் இந்நோயால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக சா்வதேச தன்னாா்வ மருத்துவ அமைப்பான ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.