;
Athirady Tamil News

‘இந்தியாவின் உண்மையான எஜமானர் அம்பானியா?’ – எலான் மஸ்க் கேள்வி

0

வாஷிங்டன்,

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

செல்போன் சிக்னல் இல்லாத இடங்களுக்கும் செயற்கைகோள் வாயிலாக இணையதள சேவை வழங்கும் தனது ‘ஸ்டார்லிங்க்’ திட்டத்தை உலகின் பல்வேறு நாடுகளுக்கு எலான் மஸ்க் விரிவுபடுத்தியுள்ளார். அந்த வகையில் இந்தியாவிலும் அந்த சேவையை அறிமுகப்படுத்த எலான்ஸ் மஸ்க் முயற்சித்தார்.

ஆனால் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சில விதிமுறைகள், தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்திய விதிமுறைகளுடன் பொருந்தவில்லை என்பதால் இந்தியாவில் இந்த திட்டத்திற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் தடுக்கப்படுகிறதா?

இதனிடையே இந்தியாவில் 11,256 கிராமங்களில் 4ஜி சேவை இல்லாததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகமாவதற்கு சில சக்திவாய்ந்தவர்கள் தடையாக இருப்பதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டினார்.

தங்களது ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே ஸ்டார்லிங்க் சேவையை சிலர் தடுத்து வருவதாக கூறிய மஸ்க், இதை இந்திய மக்களுக்கு இழைக்கப்படும் குற்றம் என்றும் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டார்.

மத்திய அரசு விளக்கம்

எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தில், “எலான் மஸ்க் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கு பாரபட்சமற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் இணைய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளுக்கும் நியாயமான, பாகுபாடற்ற விதிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஸ்டார்லிங்க் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கும் GMPCS உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு மதிப்பீடு முடிந்ததும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஜமானர் அம்பானியா?

இந்நிலையில் எலான் மஸ்க் மீண்டும் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்டார்லிங்க் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளதுடன், இந்திய அரசின் ஒவ்வொரு சட்டத்தையும், தேவையையும் ஐந்து ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது. அப்படியிருந்தும் ஏன் இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை? இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய தொழிலதிபர் அம்பானியின் பெயரை குறிப்பிட்டு எலான் மஸ்க் பதிவு வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.