;
Athirady Tamil News

தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

0

அரசு பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் கிடைக்காததால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க, கடந்த இரண்டு வருட காலமாகப் நிலவிவரும் இந்தப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், அவற்றுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

புதிய நியமனங்கள்
அரசு பல்கலைக்கழக அமைப்பு தற்போது தாங்க முடியாத அளவிற்குப் பல்வேறு பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், உயர்தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதுடன், புதிய நியமனங்கள் இடம்பெறாததன் காரணமாக அரசு கல்வியின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக பிரதமரையும் கல்வி அமைச்சரையும் சந்தித்துக் கலந்துரையாடிய போதிலும், அவற்றின் மூலம் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

அதற்கமைய, பல்கலைக்கழக மானியங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக ஜனாதிபதிக்கும் பிரதி நிதி அமைச்சருக்கும் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், இதுவரை அதற்கு எந்தவொரு பதிலோ அல்லது தீர்வோ கிடைக்கவில்லை என்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.