;
Athirady Tamil News

ஆசிய பிராந்தியத்தின் பொருளாதார, தொழிற்துறை வல்லரசாக வியட்நாம்

0

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் அந்நாட்டின் அதிபருமான உயர்தர அதிகாரியின் அண்மைய இலங்கை விஜயமானது, வெறும் இராஜதந்திர சந்திப்புகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, புதியதொரு ஆரம்பத்தை எதிர்நோக்கியிருக்கும் இலங்கைக்கு, வியட்நாமின் கடந்த கால் நூற்றாண்டு கால அசுர வளர்ச்சி ஒரு சிறந்த வழிகாட்டியாகும். ஒரு ஏழை விவசாய நாடாக இருந்து, இன்று ஆசியாவின் தவிர்க்க முடியாத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக வியட்நாம் மாறியுள்ள விதம், வளரும் நாடுகள் அனைத்தும் ஆழமாகக் கற்க வேண்டிய ஒரு பாடமாகும்.

கடந்த 2000ஆம் ஆண்டளவில், இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய இரு நாடுகளின் பொருளாதார நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு வியக்கத்தக்க உண்மை புலப்படும். அக்காலத்தில் வியட்நாமை விட இலங்கை பல வழிகளில் சாதகமான சூழலைக் கொண்டிருந்தது. சிறந்த மனிதவளக் குறிகாட்டிகள், பரவலான எழுத்தறிவு, சர்வதேச தரம் வாய்ந்த தனியார் துறை நிறுவனங்கள், உலக வர்த்தகப் பாதையில் மிக உன்னதமான புவியியல் இருப்பிடம் மற்றும் அதிக தனிநபர் வருமானம் என இலங்கை பல படிகள் முன்னிலையில் இருந்தது.

ஆனால், கடந்த கால் நூற்றாண்டு கால இடைவெளியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, வியட்நாமின் பொருளாதாரம் சுமார் 514 பில்லியன் டொலர்களை நெருங்கியுள்ளதுடன், அதன் ஏற்றுமதித் திறன் 475 பில்லியன் டொலர் என்ற பிரமாண்ட எல்லையைத் தொட்டுள்ளது. மறுபுறம், இலங்கை வெறும் 108 பில்லியன் டொலர் பொருளாதார அளவோடு, 13.6 பில்லியன் டொலர் என்ற மிகக் குறைந்த ஏற்றுமதித் தளத்தைக் கொண்டு இன்னும் போராடிக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போன்கள், அதிநவீன மின்னணு சாதனங்கள், கனரக இயந்திரங்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளில் வியட்நாம் தவிர்க்க முடியாத முடியாத அங்கமாக மாறியுள்ளது. ஆனால் இலங்கை இன்னமும் தேயிலை, ஆடைத் தொழில், இறப்பர் போன்ற பாரம்பரிய நுகர்வுப் பொருட்களையே நம்பியிருக்கின்றது.

வியட்நாமின் இந்த அசுர வளர்ச்சி தற்செயலாகவோ அல்லது அதிர்ஷ்டத்தினாலோ நிகழ்ந்தது அல்ல. அது மிகத் தெளிவான, நீண்ட கால தேசிய பொருளாதார மூலோபாயத்தின் விளைவாகும். அதிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான கொள்கைப் பாடங்கள் உள்ளன.

இலங்கை இதுவரை சிறிய அளவிலான தொழில்துறை பூங்காக்களையும், தனித்தனியான முதலீட்டு ஊக்குவிப்பு திட்டங்களையுமே முன்னெடுத்து வந்துள்ளது. ஆனால் வியட்நாம் பிரமாண்டமான ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களையும், அதிநவீன தளபாட தாழ்வாரங்களையும் (Logistics Corridors) துறைமுகங்களோடு நேரடியாக இணைத்து உருவாக்கியது. இலங்கை தனது கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய துறைமுகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை வெறும் கப்பல் போக்குவரத்து மையங்களாக மட்டும் பயன்படுத்தாமல், அவற்றை உலகத் தரம் வாய்ந்த உற்பத்தித் தளங்களாக மாற்ற வேண்டும்.

வியட்நாம் உலகிற்குத் தன்னை ஒரு பொதுவான முதலீட்டு நாடாகக் காட்டிக் கொள்ளவில்லை. மாறாக, உலகப் புகழ்பெற்ற பெரிய நிறுவனங்களை குறிவைத்து ஈர்த்தது.

ஹோ சி மின் நகரில் இன்டெல் நிறுவனம் தனது செமிகண்டக்டர் அசெம்பிளி பிரிவைத் தொடங்கியபோது, வியட்நாமால் அதிநவீன தொழில்நுட்பத்தை கையாள முடியும் என்ற நம்பிக்கை உலக சந்தைக்குக் கிடைத்தது.

2008 இல் சாம்சுங் நிறுவனம் அங்கு கால்பதித்த பிறகு, வியட்நாம் உலகின் ஸ்மார்ட்போன் தலைநகரமாக மாறியது. சாம்சுங் நிறுவனத்தைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான உள்ளூர் விநியோகஸ்தர்கள், பேக்கேஜிங் மற்றும் பொறியியல் ஆதரவு நிறுவனங்கள் என ஒரு பிரமாண்ட சுற்றுச்சூழல் அமைப்பே உருவானது.

இதன் தொடர்ச்சியாகவே ஆப்பிள், பாக்ஸ்கான், எல்ஜி, நைக் போன்ற உலகளாவிய வர்த்தக நாமங்கள் வியட்நாமை நோக்கிப் படையெடுத்தன. இலங்கையும் இத்தகைய ஒரு சில பெரும் சர்வதேச நிறுவனங்களை நாட்டின் முக்கிய துறைகளுக்குள் ஈர்க்க வேண்டும்.

மலிவான மற்றும் தடையற்ற மின்சார விநியோகம் இன்றி எந்தவொரு உற்பத்திப் பொருளாதாரமும் வெற்றிபெற முடியாது. வியட்நாம் தனது தொழில்துறை மண்டலங்களுக்கு மிகக் குறைந்த விலையில், தடையற்ற ஆற்றலை வழங்குவதில் முதலீடு செய்தது. இலங்கையிடம் காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் ஏராளமாக இருந்தாலும், அவற்றை தொழில்துறைக்கு உகந்த மலிவான மின்சாரமாக மாற்றும் கட்டமைப்பு இன்னும் முழுமை பெறவில்லை. மின்சாரக் கட்டணக் குறைப்பும், கட்டமைப்பு நவீனமயமாக்கலும் இலங்கைக்கு அவசரத் தேவையாகும்.

வியட்நாம் தனது சுங்கச் சட்டங்களை எளிமையாக்கி, சர்வதேச வர்த்தகத்திற்கான முறைகளை (Bureaucracy) ஒழித்தது. இலங்கை இந்தியப் பெருங்கடலின் மையத்தில் அமைந்திருந்தாலும், இன்னமும் வர்த்தக அனுமதி முறைகளிலும், சுங்கத் திணைக்கள செயல்பாடுகளிலும் தேவையற்ற தாமதங்களைக் கொண்டுள்ளது. துறைமுகங்களையும் உற்பத்தி மண்டலங்களையும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் இணைப்பது காலத்தின் கட்டாயமாகும்.

வியட்நாமின் அரசியல் அமைப்பில் நிலவும் ஸ்திரத்தன்மையும், ஆட்சிகள் மாறினாலும் மாறாத பொருளாதாரக் கொள்கைகளும் முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்தன. துரதிர்ஷ்டவசமாக இலங்கையில், ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் போதும் அல்லது இடைக்கால வரவுசெலவுத் திட்டங்களின் போதும் வரிகள், கட்டணங்கள் மற்றும் முதலீட்டு விதிமுறைகள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. இந்த நிலையற்ற தன்மை பெரும் சர்வதேச முதலீட்டாளர்களை இலங்கைக்குள் வரவிடாமல் தடுக்கிறது.

தற்போதைய சர்வதேச புவிசார் அரசியல் சூழல் இலங்கைக்கு ஒரு பொன்னான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. உலகின் முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது விநியோகச் சங்கிலியை சீனாவின் எல்லைகளுக்கு அப்பால் பன்முகப்படுத்த விரும்புகின்றன. இந்த உத்தியின் மூலம் தெற்காசிய பிராந்தியம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், இந்தியாவின் அசுரத்தனமான தொழில்துறை வளர்ச்சியும் அதன் அண்மைய அமைவும் இலங்கைக்கு கூடுதல் பலமாகும். ஆனால், இந்த வாய்ப்புக் கதவு காலவரையின்றி திறந்திருக்காது. தென்கிழக்காசிய நாடுகள் இந்த முதலீடுகளை ஈர்க்க மிகக் கடுமையாகப் போட்டியிடுகின்றன என்பதை இலங்கை மறக்கக் கூடாது.

சமீபத்திய கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளின் மூலம் இலங்கைக்கு ஒரு தற்காலிக நிம்மதி கிடைத்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் ஸ்திரத்தன்மை மட்டுமே இறுதி இலக்கல்ல; அது வெறும் ஆரம்பம் மட்டுமே. நாட்டின் முன்னால் இரண்டு தெரிவுகள் மட்டுமே உள்ளன:

ஜனரஞ்சக அரசியலையும், குறுகிய தேசியவாதக் கருத்துக்களையும் கேட்டுக்கொண்டு, தேசிய சொத்துக்களை உற்பத்திக்கு பயன்படுத்தாமல் எதிர்த்து, தொடர்ந்து வெளிநாட்டுக் கடன்களையும் நுகர்வுப் பொருளாதாரத்தையும் மட்டுமே நம்பி வாழும் ஒரு சிறிய நாடாகவே தேங்கி நிற்பது. இதுவே இலங்கை பாராம்பரியமாகக் கடைப்பிடித்தது. தற்போதைய தேசிய மக்கள் சத்தி அரசில் தீர்க்கமான கொள்கை நிலைத்தன்மையுடன், உலகளாவிய ஏற்றுமதி உற்பத்தியை நோக்கி நாட்டை நகர்த்தி, ஆசியாவின் அடுத்த பொருளாதார சக்தியாக உருவெடுப்பது மற்றொன்று.

இலங்கை தனக்குரிய மூலோபாய இருப்பிடத்தையும், படித்த மனிதவளத்தையும் வெறும் விருப்பங்களாகக் கொண்டிருக்காமல், வியட்நாமைப் போன்ற கடுமையான உழைப்பு, தொழில்துறை ஒழுக்கம் மற்றும் உடனடி கொள்கை அமுலாக்கத்தின் மூலம் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். அதற்கான கால அவகாசம் மிகக் குறைவே. ஆனாலும் இலங்கையின் அடுத்த கட்ட புவசார் அரசியல் முக்கியத்துவம் இந்தத் துணிச்சலான முடிவிலேயே தங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.