வெனிசுவேலா நிலநடுக்கங்கள்: 188 பேர் உயிரிழப்பு! மீட்புப் பணிகள் தீவிரம்; பல்வேறு நாடுகள் உதவிக்கரம்!
கராகஸ் : தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் புதன்கிழமை மாலை (உள்ளூர் நேரப்படி) அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு, அந்நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.
இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 188 பேர் உயிரிழந்துள்ளனர்; சுமார் 1,000 பேர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ள 200-க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
வெனிசுலாவின் கரீபியன் கடற்கரை பகுதியில் உள்ள மோரோன் நகருக்கு அருகே மையம்கொண்டிருந்த இந்த நிலநடுக்கங்கள், ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவாகின. கடந்த ஒரு நூற்றாண்டில் வெனிசுலாவில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கங்களாக இவை கருதப்படுகின்றன.
நாட்டின் முக்கிய விமான நிலையமான சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் நிலநடுக்கத்தினால் சேதமடைந்து, மூடப்பட்டுள்ளது. தலைநகர் கராகஸின் பல பகுதிகளில் மின்சாரம், தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு, இயற்கை எரிவாயு விநியோகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தையடுத்து ஏற்பட்ட அதிர்வில், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து, வீதிகளில் தஞ்சமடைந்தனர். பல கட்டடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்ததால், மக்கள் வீடுகளுக்குத் திரும்பாமல், பீதியில் பூங்காக்கள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற திறந்தவெளி இடங்களில் குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த அவசர சூழலைக் கையாள அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் வீடுகளைச் சீரமைக்க 20 கோடி டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பு நிதியை உருவாக்குவதாக இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் அறிவித்துள்ளார். பள்ளிகள் மூடப்பட்டு, அங்கு தற்காலிகத் தங்குமிடங்களும் நிவாரண மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மாயமாகியுள்ள தங்கள் உறவினர்களை மக்கள் தேடி வரும் நிலையில், இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினரும், மீட்புப் படையினரும் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அச்சம் நீடிக்கிறது.
இத்துயரமான நேரத்தில் வெனிசுலாவுக்குப் பல நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, கத்தார், மெக்ஸிகோ, எல் சால்வடார் உள்ளிட்ட நாடுகள் தங்களின் மீட்புக் குழுக்களையும் மருத்துவ உதவிகளையும் அனுப்பி வருகின்றன. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெனிசுலாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.