ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!
ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாள்களாக அதீத வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெப்பத்தை தணிக்க அந்நாட்டு மக்கள் நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் குவிந்த மக்களில் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூன் 24) வரலாறு காணாத அளவு 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகும் நிலையில், நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இதனால், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
பிரான்ஸில் வெப்பத்தின் தாக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் மக்கள் குவிந்து வரும் நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் 40 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, கடந்த 18 ஆம் தேதி முதல் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மேற்பார்வையற்ற நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாதாரணமாக காலகட்டத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் பதிவாகும் வெப்பம் வரலாற்று பதிவுகளாக மாறிவருகிறது. மாதங்களை பொருட்படுத்தாமல், பல்வேறு நகரங்கள் முன் எப்போதும் இல்லாத அளவு வெப்பத்தை பதிவு செய்கின்றன. 1947 ஆம் ஆண்டில் இருந்து பதிவாகும் அதிகபட்ச வெப்பநிலையாக தற்போது இருக்கிறது. அவசரகால எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.